கிராமப்புற வறுமை ஒழிப்புக்கு கனடா முழுமையான ஆதரவு
கிராமாபிவிருத்தி மற்றும் சமூக பாதுகாப்பு சார்ந்த நலன்புரி திட்டங்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கும் கனடா இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கிராமப்புற வறுமை ஒழிப்பு மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை வலுவூட்டும் திட்டங்களுக்கு கனடா முழுமையான ஆதரவை வழங்கும் என்று இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
கிராமாபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலவுக்கும் கனடிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் நடைபெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின் போதே அவர் இந்த உறுதியை வழங்கியுள்ளார்.
இச்சந்திப்பின் போது, இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும், ஊழலற்ற நல்லாட்சி கலாசாரத்தை நாட்டில் ஊக்குவிப்பதற்கும் அரசாங்கம் எடுத்துள்ள சாதகமான நடவடிக்கைகளை உயர்ஸ்தானிகர் பாராட்டியுள்ளார்.
அத்துடன், அண்மையில் ஏற்பட்ட 'தித்வா' அனர்த்தம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடிகளுக்கு மத்தியில், மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கம் முன்னெடுத்த அவசர நடவடிக்கைகளையும் அவர் இதன்போது பாராட்டியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இலங்கையின் தேசிய வறுமை ஒழிப்புத் திட்டமான 'பிரஜா சக்தி' வேலைத்திட்டம் குறித்து அமைச்சர் உபாலி பன்னில உயர்ஸ்தானிகருக்கு விரிவாக விளக்கமளித்ததுடன், அதனை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு கனடாவின் ஆதரவையும் கோரியிருந்தார்.
இவ்வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அவசியமான உதவிகளை வழங்குவதாக உயர்ஸ்தானிகர் உறுதியளித்ததோடு மேலும், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்களை வலுப்படுத்துவது குறித்தும் இருவரும்; விரிவாக கலந்துரையாடினர்.
கிராமாபிவிருத்தி மற்றும் சமூக பாதுகாப்பு சார்ந்த நலன்புரி திட்டங்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கும் கனடா இணக்கம் தெரிவித்துள்ளது.
இச்சந்திப்பில் கனடிய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் கிராமாபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரினாயக்க உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.





