உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சலே அறிந்திருந்தார் அமைச்சர் ஆனந்த விஜேபால
சட்டவிரோதமான முறையில் 704 அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம்.
இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் குண்டுத்தாக்குதல்கள் குறித்து சுரேஷ் சலே முன்கூட்டியதாக அறிந்தும் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. குண்டுத்தாக்குதல்களுக்கு அவர் உதவி ஒத்தாசை புரிந்துள்ளார். குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார். ஆகவே நூல் வெளியிடுபவர்கள் கலக்கமடைவதையிட்டு நாங்கள் ஆச்சரியமடைய போவதில்லை. குண்டுத்தாக்குதலுக்கான சதி 2017 ஆம் ஆண்டில் இருந்து திட்டமிடப்பட்டுள்ளது. குண்டுத்தாக்குதல்களை பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அவரது தரப்பினர்கள் நடத்தினார்கள். ஆனால் அவர்களை ஒரு தரப்பினர் தொடர்ச்சியான வழிநடத்தியுள்ளார்கள். இது சாட்சியங்கள் ஊடாக தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உணர்வுபூர்வமான பல விடயங்களை தற்போதைய நிலையில் பகிரங்கப்படுத்த முடியாது, ஏனெனில் அவை நீதிமன்ற விசாரணைகளுடன் தொடர்புடையவை. வெகுவிரைவில் உண்மை வெளிவருமென பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 09-04-2026 அன்று நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் இடம்பெற்று 7 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது. இதற்கு முன்னர் 12 தடவைகள் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதங்கள் நடைபெற்றுள்ளன. பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுகிறார்.ஆனால் கடந்த வாரமளவில் பிரதான சூத்திரதாரியை தேடிச் செல்லும் நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு சென்றிருந்தார். அங்கு பிரதான சூத்திரதாரி கிடைக்கவில்லையோ தெரியவில்லை.
குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் நீதிமன்றங்களில் விசாரணைகளில் இடம்பெறுவதால் சகல விடயங்களையும் என்னால் வெளிப்படுத்த முடியாது. குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்துக்கு முன்னர் பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.குண்டுத்தாக்குதல்கள் சூழ்ச்சியின் பிரதிபலனா என்ற சந்தேகமும் கடந்த காலங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.ஆகவே சகல சம்பவங்கள் மற்றும் விடயங்கள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது.
2019.04.21 ஆம் திகதி குறுகிய காலப்பகுதிக்குள் நாட்டில் 08 குண்டுத்தாக்குதல்கள் சம்பவங்கள் இடம்பெற்றன.காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த சஹ்ரான் உட்பட அவரது தரப்பினரால் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் திட்டமிடப்பட்ட சூழ்ச்சியின் பிரதிபலன் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் என்பது வெளிப்பட்டுள்ளது.
2018.11.31 வவுனத்தீவு பகுதியில் இரண்டு பொலிஸார் படுகொலை, 2018.12.22 மாவனெல்ல புத்தர்சிலை புடைப்பு, 2019.01.19. வனாத்தவில்லு வெடிப்பொருட்களுடன் நால்வர் கைது, 2019.03.10 மாவனெல்ல பகுதியில் தஸ்லின் என்பவர் மீது துப்பாக்கிச்சூடு, 2019.04.14 மட்டக்களப்பு, காத்தான்குடி பாலமுனை பகுதியில் வாகனம் ஒன்று வெடிக்கச் செய்தமை உள்ளிட்ட சகல சம்பவங்களும் ஒரு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவங்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தால் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் அசாத் மௌலானா வெளிப்படுத்திய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தற்போது நாளாந்தம் விசாரணைகள் இடம்பெறுகிறது.
அதேபோல் குண்டுத்தாக்குதல்கள் சூழ்ச்சியின் பிரதிபலனா என்பது குறித்தும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம்.அதற்கமை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த சரத் சமந்த என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனத்தீவு பொலிஸ் அதிகாரிகள் படுகொலைகள் தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் தவறாக வழிநடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனத்தீவு பொலிஸார் படுகொலையின் சந்தேக நபர்களாக புனர்வாழ்வுப் பெற்ற விடுதலைப் புலிகள் போராளிகளான அஜந்தன் மற்றும் சர்வநாதன் ஆகியோர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்கள்.வவுனத்தீவு பொலிஸார் படுகொலை குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டுப்பிடித்திருந்தால் 2019.04.21 ஆம் திகதி குண்டுத்தாக்குதல் இடம்பெற்றிருக்காது.விசாரணைகளை விடுதலை புலிகள் அமைப்பின் மீது திசைத்திருப்பி,சஹ்ரான் திட்டமிட்ட வகையில் பாதுகாக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பிலும் தற்போது விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்துக்கு உதவி, ஒத்தாசை வழங்கிய குற்றத்துக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இவர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் முதலாவது சாட்சியாளராகவும் காணப்படுகிறார்.இவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் நன்கு அறிந்திருந்தும் சுரேஷ் சலே எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அதேபோல் குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியதாக அறிந்திருந்தும் அவர் அதனையும் வெளிப்படுத்தவில்லை. குண்டுத்தாக்குதலின் பின்னரும் குற்றவாளிகளுடன் தொடர்புடையவர்களை பாதுகாப்பதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒத்தாசை வழங்கியுள்ளார்.
குண்டுத்தாகுதலின் பிரதான சூத்திரதாரி யார் என்று எதிர்க்கட்சித் தலைவர் கேட்கிறார். முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க பிரதான சூத்திரதாரி குறித்து எவ்வித விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை. கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து 48 மணித்தியாலத்துக்குள் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு அதிகாரிகளை இடமாற்றம் செய்தார், 704 விசாரணை அதிகாரிகளுக்கு வெளிநாட்டு தடை விதித்தார். இவ்வாறு தான் அவர் விசாரணைகளை திசைத்திருப்பினார்.
சட்டவிரோதமான முறையில் 704 அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம். பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆகவே பிரதான சூத்திரதாரி தொடர்பில் முறையான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்படுகிறது. ஆகவே உதய கம்மன்பிலவின் நூல் வெளியீட்டு சென்று எதிர்க்கட்சித் தலைவர் பிரதான சூத்திரதாரியை தேட முடியாது. ஏனெனில் குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளை திசைத்திருப்பிய கோட்டபய ராஜபக்ஷவின் சகா தான் உதய கம்மன்பில,
கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளன பிள்ளையான் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார். ஆகவே குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடையதான சந்தேகத்தின் அடிப்படையில் முக்கிய தரப்பினர் கைது செய்யப்படும் போது பலர் கலக்கமடைவது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல.
குண்டுத்தாக்குதல்களை பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அவரது தரப்பினர்கள் நடத்தினார்கள்.ஆனால் அவர்களை ஒரு தரப்பினர் தொடர்ச்சியான வழிநடத்தியுள்ளார்கள். இது சாட்சியங்கள் ஊடாக தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உணர்வுபூர்வமான பல விடயங்களை தற்போதைய நிலையில் பகிரங்கப்படுத்த முடியாது, ஏனெனில் அவை நீதிமன்ற விசாரணைகளுடன் தொடர்புடையது. வெகு விரைவில் உண்மை வெளிவரும் என்றார்.





