திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சில குழுக்கள் அரசியல் தஞ்சமடைந்துள்ளனவா?: நாமல் ராஜபக்ஷ
அரசாங்கத்தை பாதுகாக்கின்ற, அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுகின்ற திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் அரசாங்கத்தின் அனுசரணையின் அரசியல் தஞ்சமடைந்துள்ளனரா என்ற சந்தேகம் எழுகிறது.
 
        
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சில குழுக்கள் அரசாங்கத்தின் அனுசரணையின் கீழ் அரசியல் தஞ்சமடைந்துள்ளனவா என்ற சந்தேகம் எழுகிறது. இடம்பெற்றுக் கொண்டிருக்கும் துப்பாக்கிச்சூடுகளின் பின்னணியில் அரசாங்கத்தின் முக்கிய கதிரைகளில் அமர்ந்திருப்பவர்கள் இருப்பதாகக் தோன்றுகிறது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற இளைஞர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,  நீதிமன்றத்துக்குள்ளும், பொது மக்கள் சந்திப்பு தினத்தில் பிரதேசசபைக்குள்ளும் சாதாரணமாகச் சென்று துப்பாக்கிச்சூடுகளை நடத்தக் கூடியளவுக்கே இன்று தேசிய பாதுகாப்பு காணப்படுகிறது. அராசங்கமே இதற்கு பொறுப்பு கூற வேண்டும். பிரஜைகளின் பாதுகாப்பை அரசாங்கமே உறுதிப்படுத்த வேண்டும். பிரஜையொருவர் கொல்லப்பட்டு அவரது மரணம் குறித்த அறிக்கை கிடைக்க முன்னரே, அமைச்சரொருவர் மரணத்துக்கான காரணத்தைக் கூறுகின்றார்.
டான் பிரியசாத் கொல்லப்பட்ட போதும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் இவ்வாறு தான் செயற்பட்டார். இவற்றை அவதானிக்கும் போது இந்த சம்பவங்கள் தொடர்பில் உண்மையான காரணிகளை அறிந்து கொண்டு தான் அரசாங்கம் இவ்வாறு செயற்படுவதாகத் தோன்றுகிறது. அரசாங்கத்தை பாதுகாக்கின்ற, அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுகின்ற திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் அரசாங்கத்தின் அனுசரணையின் அரசியல் தஞ்சமடைந்துள்ளனரா என்ற சந்தேகம் எழுகிறது.
இதுவரையில் பதிவாகியுள்ள சுமார் 100 துப்பாக்கிச்சூடுகளில் ஒன்றைப் பற்றியேனும் அரசாங்கம் முறையான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அரசாங்கத்துக்கு தேவையான போது இடம்பெற்றுக் கொண்டிருந்த துப்பாக்கிச்சூடுகள் தற்போது அரசாங்கத்துக்கு தேவையில்லை என்ற போது நிறுத்தப்பட்டுள்ளன. அரசாங்கத்திடம் அரசியல் தஞ்சமடைவதற்கென திட்டமிட்ட குற்றச் செயல்களின் ஈடுபடும் குழுவொன்று உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.
அரசாங்கத்தில் முக்கிய கதிரைகளில் அமர்ந்திருப்பவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற புலனாய்வுத் தகவல்களை உதாசீனப்படுத்தியவர்களாவர். இவர்கள் தான் போதைப்பொருள் கொள்கலன்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவல்களையும் உதாசீனப்படுத்தி, அவற்றையும் எவ்வித சோதனைகளும் இன்றி விடுவித்துள்ளனர். அவர்களே இவ்வாறான சம்பவங்களின் பின்னணியிலும் இருக்கின்றனர் என்றே தோன்றுகிறது. ஏனையோரைப் போன்று என்னை அவ்வளவு இலகுவாக மூக்கால் அழ வைக்க அரசாங்கத்தால் முடியாது என்றார்.





 
  
