2025 - 2030 க்கான தேசிய காலநிலை நிதியியல் செயற்திட்டம் வெளியீடு
'உலகளாவிய ரீதியில் காலநிலைசார் தாக்கங்கள் தீவிரமடையும்போது, இலங்கை போன்ற நாடுகள் காலநிலை அச்சுறுத்தல்களையும் நிதியியல் நிலைவரங்களையும் ஒருசேரக் கையாள்வதில் பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்கின்றன.
 
        
இலங்கையின் காபன் பயன்பாட்டை பூச்சியமாக்குதல் மற்றும் செயற்திறன்மிக்க காலநிலைசார் முதலீடுகளை ஊக்குவித்தல் எனும் இலக்குகளை அடைவதற்கான வழிவகைகளை உள்ளடக்கிய '2025 - 2030 க்கான தேசிய காலநிலை நிதியியல் செயற்திட்டம்' சர்வதேச காலநிலை நடவடிக்கை தினமான 24-10-2025அன்று வெளியிடப்பட்டது.
உரியவாறான நிதியியல் திட்டமிடல் மூலம் காலநிலைசார் பாதிப்புக்களில் இருந்து மீண்டெழும் தன்மையை மேம்படுத்தல் மற்றும் நிலைபேறான அபிவிருத்தியை ஊக்குவித்தல் என்பவற்றுக்கான உத்திகளை உள்ளடக்கியிருக்கும் இச்செயற்திட்டமானது பிரிட்டன் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் காலநிலைசார் நிதியிடல் செயற்திட்டத்தின் ஊடாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்துடன் இணைந்து நிதியமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
'உலகளாவிய ரீதியில் காலநிலைசார் தாக்கங்கள் தீவிரமடையும்போது, இலங்கை போன்ற நாடுகள் காலநிலை அச்சுறுத்தல்களையும் நிதியியல் நிலைவரங்களையும் ஒருசேரக் கையாள்வதில் பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்கின்றன. காலநிலையுடன் தொடர்புடைய தாக்கங்களால் வருடாந்தம் ஏற்படும் பாதிப்புக்களின் பெறுமதி 50 பில்லியன் ரூபாவைக் கடந்திருக்கிறது. இவ்வாறானதொரு பின்னணியில் காலநிலைசார் நிதியிடல் என்பது இலங்கையின் அபிவிருத்தித் திட்டத்தில் மையப்புள்ளியாக இருக்கவேண்டும்' என ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தோடு இச்செயற்திட்டத்தின் வெளியீடானது சர்வதேச நிதியுதவிகளைக் கோருவதற்கும், காலநிலை மாற்ற சவால்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலான தேசிய திட்டங்களை வகுப்பதற்குமான இலங்கையின் இயலுமையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.





 
  
