தையிட்டி விகாரத்துக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்: நயினாதீவு விகாராதிபதி
நயினா தீவில் போர்க்காலத்திலிருந்து நான் இருக்கின்றேன். தமிழ் மக்களுடன் சுமூகமான உறவுகள் உள்ளன. எனக்கும் அவர்களுக்கும் எந்தப்பிரச்சினைகளும் காணப்படவில்லை.
நாட்டில் போர் நிறைவடைந்து 16ஆண்டுகள் பூரணமாக நிறைவடைந்துள்ள போதும் வடக்கு,கிழக்கில் இன்னமும் போர்க்காலத்தில் காணப்பட்ட சூழலையொத்த நிலைமைகளே நீடிக்கின்றன. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வினை உங்களது (ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க) தலைமையிலான அரசாங்கத்தினாலேயே காணமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று நயினாதீவு ரஜமஹா விஹாரை விகாராதிபதி நவதகல பதுமகித்தி திஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தையிட்டி விகாரை விவகாரத்துக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்படுவதன் ஊடாகவும், தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை அவர்களிடத்தில் மீளக் கையளிப்பதன் ஊடாகவும் கணிசமான பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண முடியும் என்றும் நவதகல பதுமகித்தி திஸ்ஸ தேரர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடத்தில் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு இரு நாள் விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 17-01-2026 அன்று நயினாதீவு ரஜமஹா விஹாரைக்குச் சென்று, விகாராதிபதி நவதகல பதுமகித்தி திஸ்ஸ தேரரைச் சந்தித்து உரையாடியதோடு அவரிடத்தில் ஆசீர்வாதமும் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனான உரையாடல் பற்றி வீரகேசரிக்கு அவர் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் இன ரீதியான பதற்றத்தையும், குரோதங்களையும் ஏற்படுத்திய போர் நிறைவடைந்து 16ஆண்டுகளாகின்றன. எனினும் வடக்கு,கிழக்கு பகுதிகள் இன்னமும் போர்க்காலத்தில் காணப்பட்ட புறச்சூழல்களே நீடித்துக்கொண்டிருக்கின்றன.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளை வழங்கி இந்த நாட்டில் நிரந்தரமான சமாதானமும், நல்லிணக்கமும் மிக்க சகவாழ்வு ஏற்பட வேண்டும். அதற்காகவே உங்கள் (ஜனாதிபதி அநுரகுமார) தலைமையிலான அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள். அந்தப் பணியை உங்களுடைய அரசாங்கத்தினால் தான் நிறைவேற்ற முடியும். வேறு யாராலும் அந்தப் பணியை முன்னெடுக்க முடியாது. ஆகவே அந்த விடயத்தில் கணிசமான காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
தற்போது, வடக்கில் தையிட்டி விகாரைப் பிரச்சினை மிகவும் உக்கிரமடைந்துள்ளது என்பதை அறிவீர்கள். இந்த விகாரைக்கான அடிக்கல் நாட்டப்பட்டபோது, நான் நேரில் சென்று பார்வையிட்டேன். அது தவறாக தனியார் காணியில் அடிக்கல் நட்டப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டினேன். எனினும் அந்த விகாராதிபதி செவிசாய்திருக்கவில்லை.
அதன்பின்னர் குறித்த விகாரையை அமைக்கும் பணிகளில் இராணுவத்தினர் பங்கேற்றிருந்தார்கள். அச்சமயத்தில் நான் நேரடியாக இராணுவத் தலைமையகத்திற்குச் சென்று ஜெனரல் சவேந்திர சில்வாவைச் சந்தித்து தையிட்டி திஸ்ஸ விகாரை அமைக்கப்படுகின்ற நிலங்கள் தனியாருக்கு உரியவை. நாக விகாரைக்கு சொந்தமான நிலங்கள் அருகில் உள்ளன. அவற்றை வழங்குகின்றேன் அதில் விகாரையை அமையுங்கள் என்றும் எடுத்துரைத்தேன். ஆனால் எந்தவிதமான நன்மைகளும் ஏற்படவில்லை. திட்டமிட்டபடி குறித்த காணியிலேயே திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டது.
தற்போது அந்த விகாரையால் வடக்கில் இன,மத ரீதியான பிரச்சினை நீடித்துக்கொண்டிருக்கின்றது. பௌத்த மதத்தில் எங்கும் ஆக்கிரமிப்புச் செய்து விகாரைகளை அமைக்க வேண்டும் என்று கூறப்படவில்லை. மக்களின் மனங்களை காயப்படுத்த வேண்டும் என்று சொல்லப்படவில்லை. தவறுகள் இழைக்கப்பட்டுள்ளன. அவை திருத்தப்பட வேண்டும். ஆகவே இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும். அது குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்.
மேலும், தமிழ் மக்களின் பல காணிகள் வடக்கிலும்,கிழக்கிலும் விடுவிக்கப்படாத நிலைமைகள் உள்ளன. அந்தக் காணிகளை அவர்களிடத்தில் கையளிப்பதன் ஊடாக பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என்பது எனது நிலைப்பாடாகும். அந்த விடயத்தில் அரசாங்கம் அதிகமான அக்கறை கொள்ள வேண்டும்.
நயினா தீவில் போர்க்காலத்திலிருந்து நான் இருக்கின்றேன். தமிழ் மக்களுடன் சுமூகமான உறவுகள் உள்ளன. எனக்கும் அவர்களுக்கும் எந்தப்பிரச்சினைகளும் காணப்படவில்லை. ஆகவே இன,மத ரீதியாக பிரச்சினைகள் போரின் பின்னரும் நீடிப்பதற்கு இடமளிக்காதீர்கள். இது நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான, நிரந்தரமான சமாதனத்தை தோற்றுவிப்பதற்கான பயணத்தில் பெரும் பாதகமான நிலைமைகளை உருவாக்கும் ஆபத்தைக் கொண்டிருக்கின்றது என்பதை எடுத்துக் கூறினேன்.
அப்போது, ஜனாதிபதி அநுரகுமார, எனது கருத்துக்களை ஏற்றுக்கொண்டதோடு, தென்னிலங்கையிலும், வட இலங்கையிலும் இன,மத ரீதியான வேறுபாடுகளை குறுகிய அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்தும் போக்கு இன்னமும் உள்ளதென்பதையும் தையிட்டி விடயம் உட்பட தமிழ் மக்களின் காணி விடுப்பு மற்றும் ஏனைய விகாரங்களில் தனது கரிசனைகள் உள்ள என்றும் அவற்றை படிப்படியான நடவடிக்கைள் ஊடாக முடிவுக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அவரது வார்த்தைகள் நம்பிக்கை அளிப்பதாக உள்ள நிலையில் வடக்கில் அவர் முன்னெடுக்கின்ற செயற்பாடுகளுக்கு தெற்கில் ஏற்படுகின்ற எதிர்ப்புக்கள் மிகப்பெரும் சவால்களை தோற்றுவிக்கின்றன என்ற யார்த்தத்தையும் நாம் புரிந்துகொண்டு அவதானமாக விடயங்களை கையாளுமாறு கோரினேன் என்றார்.





