காற்றழுத்த தாழ்வு பிரதேசம் சூறாவளியாக மாற்றமடையலாம்
நாளை காலை தென்மேற்கு மற்றும் அண்மையாகவுள்ள மேற்கு - மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புக்களுக்கு மேலாக இது சூறாவளியாக மாற்றமடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
        
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புக்கு மேலாக நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பிரதேசமானது, மேற்கு திசையில் நகர்ந்து ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து மட்டக்களப்புக்கு கிழக்காக சுமார் 900 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது.
இத்தொகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதோடு, 26-10-2025 ஞாயிற்றுக்கிழமை ஆழமான தாழமுக்கமாக வலுவடையக் கூடும் என்றும் நாளை திங்கட்கிழமை காலை சூறாவளியாக மாற்றமடையக் கூடும் என்றும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதற்கமைய நாளை காலை தென்மேற்கு மற்றும் அண்மையாகவுள்ள மேற்கு - மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புக்களுக்கு மேலாக இது சூறாவளியாக மாற்றமடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின், தொடர்ந்து அடுத்த 48 மணித்தியாலங்களில் ஆந்திரப்பிரதேச கரையை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட ஆழம் குறைந்த கடற்பரப்புக்களில் கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை கடற் பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





 
  
