பொலிஸ்மா அதிபர் ஊடாக எதிர்க்கட்சிகளை முடக்கும் அரசு; ஐக்கிய மக்கள் சக்தி
தேசிய பாதுகாப்பு பாரதூரமான பிரச்சினையாகியுள்ளது. 1988, 1989களில் காணப்பட்டதைப் போன்ற நிலைமை மீண்டும் உருவெடுத்துள்ளது.
நாடொன்றில் எதிர்க்கட்சி இல்லாவிட்டால் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியாது. சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் பொலிஸ்மா அதிபரிடம் வழங்கப்பட்டு, ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் ஊடாக எதிர்க்கட்சிகளை முடக்கி தனி கட்சி ஆட்சியை முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகு மென ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
பொலிஸ்மா அதிபர் பாராளுமன்றத்துக்கு அழைப்பட்டு, எம்.பி.க்களுக்கான பாதுகாப்பு குறித்து வலியுறுத்தப்பட்டமை தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த 3 தசாப்தங்களுக்கும் மேல் கட்சி பேதமின்றி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. அமைச்சர்களுக்கு தொகுதிகளுக்குச் செல்லும் போது அந்தந்த பொலிஸ் நிலையங்களால் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஆனால் தற்போது எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு அந்த பாதுகாப்பு இல்லை. கடந்த ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக பொலிஸ் அறிக்கையில் நிரூபனமாகியுள்ளது.
இந்நிலையில் எந்த அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டது என பொலிஸ்மா அதிபரிடம் விளக்கம் கோரியிருந்தோம். அது அரசியல் ரீதியான தீர்மானமாகும் என பொலிஸ்மா அதிபர் பதிலளித்திருந்தார். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்பில் அரசியல் ரீதியான தீர்மானம் எடுப்பதற்கு ஜனாதிபதிக்கோ, அவர் தலைமையிலான அரசாங்கத்துக்கோ உரிமை இல்லை. எனவே அரசியல் ரீதியான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுப்பது தவறாகும்.
தற்போது தேசிய பாதுகாப்பு பாரதூரமான பிரச்சினையாகியுள்ளது. 1988, 1989களில் காணப்பட்டதைப் போன்ற நிலைமை மீண்டும் உருவெடுத்துள்ளது. எனவே ஆளும், எதிர்தரப்பு என்ற பேதமின்றி அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். கிராம மட்டங்களில் நிறுவப்படும் பாதுகாப்பு குழுக்கள் கூட இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன. எதிர்க்கட்சியினருக்கு பாதுகாப்பை நீக்கி, அவர்களை முடக்கி தனி கட்சி ஆட்சி முறைமைக்குச் செல்கின்றனர்.
நாடொன்றில் எதிர்க்கட்சி இல்லாவிட்டால் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியாது. சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரம் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளமை முற்று முழுதாக ஜனநாயக விரோத செயலாகும். பாதாள உலகக் குழுக்களுக்கிடையில் மோதல்கள் இடம்பெற்றாலும், ஒருவரையொருவர் கொல்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை. நாட்டில் பாதாள உலகக் குழுக்களின் ஆட்சியும் காணப்படுகிறது என்பதை ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டுள்ளார். அவ்வாறிருக்கையில் நாட்டில் ஒவ்வொரு பிரஜைகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றார்.





