ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவருக்கு சரத் வீரசேகர கடிதம்
இராணுவத்தினரை இவ்வாறு சித்திரவதைக்குள்ளாக்குவது விடுதலை புலிகள் அமைப்பின் கொள்கையை கொண்டுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை மகிழ்விக்கும் ஒரு செயற்பாடு என்பதில் சந்தேகமில்லை.
இராணுவத்தினரை சித்திரவதைக்குள்ளாக்குவது விடுதலைப் புலிகள் அமைப்பின் கொள்கையை கொண்டுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை மகிழ்விக்கும் ஒரு செயற்பாடு என்பதில் சந்தேகமில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பின் பயங்கரவாதி ஒருவர் வழங்கிய வாக்குறுதிக்கமைய பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சுரேஸ் சலே கைது செய்யப்பட்டமை கவலைக்குரியது. நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்படும் வரை அவரை மரியாதையாக நடத்துமாறு வலியுறுத்தி பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிடுமாறு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவருக்கு முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார்.
ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: அரச புலனாய்வு பிரிவின் முன்னான் பிரதானி சுரேஸ் சலே, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தடுப்புக்காவலில் இருந்தபோது அவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் சித்திரவதைகள் மற்றும் முறையற்ற நடத்தைகள் காரணமாக அவர் தற்போது தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நமது தாய்நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக, வெவ்வேறு பாத்திரங்களில், நமது அந்தந்தப் படைகளில் போரிட்டுள்ளோம். உலகின் மிக கொடூரமான பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளின் அமைப்பை நாம் முழுமையாக தோற்கடிப்பதற்கு, போர்க்களத்தில் கட்டியெழுப்பப்பட்ட பரஸ்பர புரிதலும் தோழமையுமே முக்கிய காரணமாக அமைந்தது.சுரேஷ் சல்லே விடுதலைப் புலிகளின் அமைப்பை தோற்கடிப்பதில், உளவுத்துறையில் தனது நேரத்தையும் சக்தியையும் அர்ப்பணித்து, தனது இளமைக் காலத்தை தியாகம் செய்த நமது சக தோழர்களில் ஒருவராவார்.
நாங்கள் அனைவரும் இப்போது ஓய்வுபெற்ற சிரேஷ்ட வீரர்கள். தற்போது சேவையில் இருக்கும் இளம் அதிகாரிகள், தாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், பயன்படுத்திய உத்திகள் போன்றவற்றை குறிப்பாக தங்களது சேவை சார்ந்த ஆராய்ச்சி ஆவணங்களுக்காக எங்களிடம் கற்றுக்கொள்ள அடிக்கடி வருகிறார்கள்.
ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிகள் என்ற ரீதியில்,நாம் இன்னும் தற்போது சேவையில் இருக்கும் இளம் அதிகாரிகளுக்கு உத்வேகமாக இருக்கிறோம் என்று கூறுவது மிகையாகாது. அவர்கள் எங்களது சேவை சார்ந்த நடவடிக்கைகள், அறிக்கைகள் மற்றும் நேர்காணல்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில், எங்களது ஓய்வோடு எங்களது தோழமையும், ஒருவருக்கொருவர் காட்டும் விசுவாசமும் மறைந்துவிட வேண்டுமா? சீருடையைக் கழற்றிவிட்டவுடன் நாட்டைப் பாதுகாக்கும் எங்களது பொறுப்பு முடிந்துவிடுகிறதா? பயங்கரவாதிகளுக்கு எதிரான போரின் போது நாம் ஒருவருக்கொருவர் துணையாக நின்றது போல,எங்களது சேவைக்காலம் முடிந்த பின்னரும் நாம் ஒருவருக்கொருவர் உறுதுணையாக நிற்கக் கூடாதா?
சுரேஷ் சலே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் ஒரு சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரலின் கூற்றுப்படி, பிரித்தானியாவின் பிரபலமற்ற செனல் 4 ஊடகத்திற்கு அசாத் மௌலானா என்பவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அசாத் மௌலானா என்பவர் முன்னாள் எல்.டி.டி.ஈ உறுப்பினரும், ஐ.எ.ஸ்ஐ..எஸ் அமைப்பின் ஆதரவாளருமாவார். அவர் நாட்டை விட்டு தப்பியோடி, தற்போது சுவிட்சர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ளார். அவருக்கு எதிராக இரண்டு பகிரங்க பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரான்சுக்கு விஜயம் செய்து, பாரிஸிலுள்ள இலங்கைத் தூதரகத்தினுள் மௌலானாவைச் சந்தித்து வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுள்ளார். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே சுரேஸ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்சில் உள்ள இலங்கை தூதரகத்தில் இணைக்கப்பட்டிருந்த போது, அங்கிருந்த விடுதலைப் புலிகளின் வலையமைப்பை அழிப்பதில் முக்கிய பங்காற்றிய சுரேஷ் சலே பாரிஸில் உள்ள ஒரு முன்னாள் எல்.டி.டி.ஈ பயங்கரவாதி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை நினைத்துப் பார்ப்பதே எவ்வளவு வேதனையானது?
சல்லேவுக்கு எதிராக சுமத்திய அசாத் மௌலானா குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த ஒரு விசாரணை குழு, மௌலானா கூறியது முற்றிலும் ஒரு அப்பட்டமான பொய் என்பதை சந்தேகத்துக்கிடமாக நிரூபித்துள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சுரேஸ் சலே தடுப்புக்காவலின் போது மிகவும் கீழ்த்தரமான முறையில் நடத்தப்பட்டுஇ சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். இராணுவத்தினரை இவ்வாறு சித்திரவதைக்குள்ளாக்குவது விடுதலை புலிகள் அமைப்பின் கொள்கையை கொண்டுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை மகிழ்விக்கும் ஒரு செயற்பாடு என்பதில் சந்தேகமில்லை.
தடுப்புக்காவலில் சுரேஷ் சலே நடத்தப்படும் விதத்தை கண்டித்து ஒரு பகிரங்க அறிக்கையை வெளியிட வேண்டும் . அந்த யுத்த வீரன் குற்றம் சாட்டப்பட்டவராக இருக்கும் வரை அவருக்கு உரிய மரியாதையை வழங்குமாறு அரசாங்கத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் மரியாதையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.





