அரசாங்கத்திடம் இலங்கை பொருட்கள் மற்றும் போக்குவரத்து சேவைகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை
வளைகுடா நாடுகளில் உள்ள துறைமுகங்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளைப் பயன்படுத்தி, அங்கு செல்லும் கப்பல்களுக்குத் தேவையான சேவைகளை இலங்கை துறைமுகங்கள் மூலம் வழங்க முடியும்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலால் கப்பல் நிறுவனங்கள் காப்பீட்டு செலவுகளை ஈடு செய்வதற்காக மேலதிகக் கட்டணங்களை விதிக்கத்திட்டமிட்டுள்ளன. எனவே இதனால் ஏற்படக் கூடிய அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பை தவிர்ப்பதற்கு அரசாங்கம் துரித திட்டமிடல்களை முன்னெடுக்க வேண்டும் என இலங்கை பொருட்கள் மற்றும் போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் செயலாளர் இனாம் கபூர் தெரிவித்தார்.
கொழும்பில் 03-03-2026 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்த காணொளியில், இலங்கை சரக்கு மற்றும் போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் செயலாளர் இனாம் கபூர், ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையிலான தற்போதைய பதற்றமான போர்ச் சூழல் இலங்கைக்கு ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாக விளக்குகிறார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, கப்பல் நிறுவனங்கள் காப்பீட்டுச் செலவுகளை ஈடுகட்ட மேலதிக கட்டணங்களை விதிக்கத் திட்டமிட்டுள்ளன. இதன் காரணமாக, குறித்த பிராந்திய நாடுகளிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படும் பொருட்களின் இறக்குமதி செலவு அதிகரிக்கும். இது சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமாக உயரக் காரணமாக அமையும்.
இலங்கை தேயிலையின் மிகப்பெரிய நுகர்வோர் மத்திய கிழக்கு நாடுகளாகும். போர் காரணமாக கப்பல் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்தால், தேயிலை ஏற்றுமதி செய்வதற்கு அதிக செலவாகும். இது இலங்கையின் தேயிலை தொழில்துறையைப் பெரிதும் பாதிக்கும். எனவே, ஏற்றுமதியாளர்களுக்கு அரசு உரிய சலுகைகளை வழங்கி, இந்த நெருக்கடியை சமாளிக்க உதவ வேண்டும்.
போர்ச் சூழலால் கப்பல்கள் நீண்ட தூரம் சுற்றி வர வேண்டிய நிலை ஏற்படலாம். இதனால் பொதுவாக 4 நாட்களில் வரக்கூடிய கப்பல்கள் இலங்கையை வந்தடைய 6 முதல் 10 நாட்கள் வரை ஆகலாம். வரவிருக்கும் ரமலான் பண்டிகை மற்றும் சித்திரை புத்தாண்டு காலங்களில் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க இது குறித்த முறையான திட்டமிடல் அவசியம்.
இலங்கைக்கு தேவையான எரிபொருள் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து வருவதால், தற்போதைக்கு எரிபொருள் விநியோகத்தில் பெரிய பாதிப்பு இருக்காது. இருப்பினும், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஏற்றுமதியாளர்கள் மிக முக்கியம் என்பதால், அவர்களுக்கு தேவையான வசதிகளை அரசு உடனடியாக செய்துகொடுக்க வேண்டும்.
இது ஒரு நெருக்கடி என்றாலும், இதை ஒரு வாய்ப்பாகவும் பயன்படுத்தலாம். வளைகுடா நாடுகளில் உள்ள துறைமுகங்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளைப் பயன்படுத்தி, அங்கு செல்லும் கப்பல்களுக்குத் தேவையான சேவைகளை இலங்கை துறைமுகங்கள் மூலம் வழங்க முடியும். இதன் மூலம் இலங்கை பொருளாதார ரீதியாக நன்மையடைய முடியும். இதற்கு துறைமுக அபிவிருத்தி அதிகாரசபையின் திறமையான வழிநடத்தல் அவசியமாகும்.
கப்பல் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிய சந்தைகளை எவ்வாறு கைப்பற்றுவது என்பது குறித்து அரசு திட்டமிட வேண்டும். ஏற்றுமதியாளர் சங்கங்களை அழைத்து அவர்களுக்கு வழங்க வேண்டிய இராஜதந்திர ரீதியிலான தீர்வுகளை வழங்க வேண்டும். குறிப்பாக தேயிலை ஏற்றுமதியாளர்களுக்கு விசேட சலுகைகளை அறிவிக்க வேண்டும். எவ்வாறிருப்பினும் இந்தப் போர்ச் சூழல் இலங்கைக்கு சவாலாக இருந்தாலும், சரியான திட்டமிடல் மூலம் பாதிப்புகளைக் குறைத்து, புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றார்.





