எதிர்க்கட்சியினருக்கு ஜனாதிபதி அநுரகுமார பகிரங்கமான அழைப்பு
மக்கள் இறந்து கிடக்கும் போது அதில் அரசியல் செய்ய வேண்டாம். அரசாங்கத்துடனான பிரச்சினையை அரசியல் ஊடாக தீர்த்துக் கொள்ளுங்கள்.
தற்போதைய இக்கட்டான நிலையில் பொது கொள்கையின் அடிப்படையில் செயற்படுவோம். ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்று பிளவுப்படாமல் தேசிய சபை யாக செயற்பட டுவதற்கு வாருங்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சபையில் பகிரங்க அழைப்பு விடுத்தார்.
பாராளுமன்றத்தில் 05-12-2025அன்று நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி ,திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, இம்முறை முழு நாடும் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பல உயிர்களை இழந்துள்ளோம். நாட்டு மக்களின் மனம் வேதனையால் நிரம்பியுள்து. வேதனையை கண்ணீரால் வெளிப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. பலர் காணாமல் போயுள்ளார்கள். இறந்தவர்களின் உடல்கள் கூட கிடைக்கவில்லை.இது சமூகத்துக்கும் பாரிய வேதனையை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போதலில் வேதனையை நாங்கள் நன்கு அறிவோம்.அதன் அனுபவம் எமக்கு உண்டு. இந்த வேதனை எனக்கும் உண்டு. ஆகவே காணாமல் போதலின் வேதனை பாரதூரமானது. ஆகவே இந்த சந்தர்ப்பத்தில் மனதில் வேதனையுடன் அனைவருக்கும் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.அரசாங்கம் என்ற அடிப்படையிலும் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்ட போது விமானி நிர்மல சியம்பலாபிட்டிய வீர மரணம் அடைந்துள்ளார். அதேபோல் சுண்டிக்குளம் பகுதியில் ஐந்து கடற்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போது காணாமல் போயுள்ளார்கள். வடக்கு அரசியல்வாதிகள் இதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.
இவர்களை இன்றும் கண்டுப்பிடிக்கவில்லை.அதேபோல் தர்மதாச எனும் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார். அதேபோல் அனுருத்த குமார எனும மின் சேவையாளர் உயிரிழந்துள்ளார். ஆகவே இவர்கள் அனைவரும் மக்களுக்காக உயிரிழந்துள்ளார்கள்.இவர்களின் இழப்பு நாட்டுக்கானதே.
அரச அதிகாரிகள் மக்களை பாதுகாக்க போராடிக் கொண்டிருக்கும் போது குளிர் அறையில் இருந்தவாறு சென்றவர்கள் அரச அதிகாரிகளை கேள்விக் கேட்கிறார்கள். இது முற்றிலும் தவறானது. நெருக்கடியான நிலையில் அரச அதிகாரிகள், சுகாதார சேவையாளர்கள் செயற்பட்ட விதத்தை வரவேற்கிறேன்.
அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் குறைப்பாடு
நெருக்கடியான நிலையில் அவசர சட்டத்தை அமல்படுத்தினேன். எதிர்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 7 ஆண்டுகளுக்கு பின்னரே கடந்த ஆகஸ்ட் மாதம் தேசிய அனர்த்த சபை கூடியது. அனர்த்த முகாமைத்துவ சட்டத்தில் குறைபாடுகள் காணப்படுகிறது. ஆகவே அந்த ச ட்டத்தை திருத்தம் செய்ய வேண்டும் என்று அந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவரும் அந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டார்.
தற்போதைய இக்கட்டான நிலையில் அனர்த்த முகாமைத்துவ சட்டத்தை செயற்படுத்துவது பொறுத்தமற்றது என்று உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே பொதுமக்கள் பாதுகாப்புப் சட்டத்தின் பிரகாரம் அவசர சட்டத்தை அமல்படுத்தினேன். இந்த சட்டத்தின் பிரகாரமே அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரை நியமித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன். ஆகவே நான் அரசியலமைப்பையோ அல்லது சட்டத்தையோ மீறவில்லை.
ஜனநாயகத்துக்கு எதிராக அவசரகால சட்டத்தை பயன்படுத்த போவதில்லை. பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தை மக்களின் ஜனநாயக சுதந்திரத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் பயன்படுத்தப் போவதில்லை. எவரும் அச்சமடைய வேண்டும். என்னை விமர்சிப்பதை நான் ஒருபோதும் கவனத்திற் கொள்ள போவதில்லை. விமர்சனங்களுக்கு எதிராக சாதாரன சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க முடியும்.
நெருக்கடியான நிலையில் மக்களை தவறாக வழிநடத்தி முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சித்தால், அவர்களுக்கு எதிராகவே இந்த சட்டம் பயன்படுத்தப்படும். மக்களின் ஜனநாயகத்துக்கு எதிராக பயன்படுத்த போவதில்லை. பாராளுமன்றத்துக்குள் இருந்துக் கொண்டு உறுப்பினர் ஒருவர் கம்பளை பகுதியில் 1000 பேர் இறந்ததாக குறிப்பிட்டார்.வெளியில் சென்று குறிப்பிட்டால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வேன்.மக்களை தூண்டிவிட இடமளிக்க முடியாது.
பாதிப்பு நிவாரணம் வழங்க நடவடிக்கை
2026 ஆம் ஆண்டுக்கு புதிய வரவு - செலவுத் திட்டத்தை கொண்டு வரப்போவதுமில்லை, குறை நிரப்பு பிரேரணை கொண்டு வரப்போவதில்லை. 10500 மில்லியன் ரூபா மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 50 பில்லியன் ரூபா ஒதுக்கீட்டுக்காக குறைநிரப்பு பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்படும். சேதமடைந்த வீடுகளை துப்பரவு செய்வதற்காக 25 ஆயிரம் முதற்கட்டமாக வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு உரிய தளபாடங்கள் மற்றும் ஏனைய பொருட்களை கொள்வனவு செய்ய 50 ஆயிரம் ரூபா வழங்கப்படும். வாடகை வீட்டில் வாழ்பவர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படும்.
மண்சரிவால் பாதிக்கப்பட்டு முகாம்களில் வாழ்பவர்கள் வாடகை வீட்டில் வசிப்பதற்கு மூன்று மாதத்துக்கு 25 ஆயிரம் ரூபா வழங்கப்படும். குடும்பத்தில் இரண்டு பேருக்கு மேற்பட்டவர்கள் இருப்பார்களாயின் 50 ஆயிரம் ரூபா வழங்கப்படும். விவசாய உற்பத்தியை மேம்படுத்த ஒரு ஹேக்கர் நிலத்துக்கு 1 இலட்சத்து 50000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.
அழிவடைந்துள்ள 1 இலட்சத்து 60 ஆயிரம் ஹேக்கர் நிலப்பரப்பும் மீண்டும் விவசாய நிலமாக மாற்றப்படும். அதேபோல் மரகறி உற்பத்திக்கு 1 ஹேக்கர் நிலத்துக்கு 2 இலட்சம் ரூபா வழங்கப்படும். விவசாயிகள் துவண்டுவிட கூடாது. மீண்டு வர வேண்:டும். முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன்.
பாதிக்கப்பட்டுள்ள விலங்கு வேளாண்மையில் ஈடுபடுபவர்களுக்கு 2 இலட்சம் ரூபா வழங்கப்படும். அதேபோல் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு 2 இலட்சம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். வங்கி அடிப்படையில் தொழில் முயற்சியாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.அதற்குரிய சுற்றறிக்கையை மத்திய வங்கி வெளியிடும். காப்புறுதி நிறுவனங்களும் நிவாரணம் வழங்கும் அதற்குரிய அறிவுறுத்தல்கள் வெளியிடப்படும்.
பதிவு செய்யப்பட்டுள்ள மீன்பிடி படகுகள் முழுமையாக சேதமடைந்திருந்தால் ஒரு படகுக்கு தலா 4 இலட்சம் ரூபா வழங்கப்படும். பாடசாலை மாணவர்களுக்கு 25 ஆயிரம் ரூபா வழங்கப்படும். அஸ்வெசும திட்டத்தின் ஊடாக 6 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படும். எமது மாணவர்களுக்கு நாங்கள் வழங்குவோம். கல்விக்கான நிதி செலவல்ல, அது சிறந்த முதலீடு.
வர்த்தக கட்டிடங்கள் சேதமடைந்திருந்தால் மதிப்பீடுகளுக்கு அமைய 50 இலட்சம் ரூபா வழங்கப்படும். முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு, வீடு கட்டிக் கொள்வதற்கு 50 இலட்சம் ரூபா வழங்கப்படும்.காணி இல்லையாயின் பாதுகாப்பு பகுதிகளில் அவர்களுக்கு காணி வழங்கப்படும். அரச காணி இல்லாவிடின் காணி ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு 50 இலட்சம் ரூபா வழங்கப்படும்.
பகுதியளவில் சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்கு உயர்ந்தபட்சமாக 25 இலட்சம் ரூபா வழங்கப்படும்.அதேபோல் உயிரிழந்தவர்களின் உயிரை மதிப்பிட முடியாது. இருப்பினும் அவர்களின் குடும்பங்களுக்கு 10 இலட்சம் ரூபா வழங்கப்படும்.
19 ஆம் திகதி குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்படும்
பாராளுமன்றத்துக்கு தற்போது சமர்ப்பித்துள்ள கடன் பெறும் எல்லை ஒருபோதும் திருத்தம் செய்யப்படமாட்டாது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 50 பில்லியன் ரூபாவுக்கான குறை நிரப்பு பிரேரணை கொண்டு வரப்படும். இந்த குறைநிரப்பு பிரேரணைக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
சேதமடைந்த வீதிகள், பாலங்கள் புனரமைப்பு
சேதமடைந்த பாதைகள் , பாலங்களை புனரமைக்க விசேட கவனம் செலுத்த வேண்டும். எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் பிரதான பாதைகள் , பாலங்கள் புனரமைக்கப்படும்.இன்னும் இரண்டு வாரங்களுக்குள் மின்விநியோக கட்டமைப்பு வழமைக்குத் திரும்பும், நீர் விநியோகம் சீரமைக்கப்படும். புகையிரத பாதைகள் வெகுவிரைவில் புனரமைக்கப்படும்.
இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்டுள்ள அழிவில் இருந்து வெகுவிரைவில் மீள்வதற்கு ஜனாதிபதி செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்படும். அது சட்டத்தின் பிரகாரம் செயற்படுத்தப்படும். நிதி முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் இந்த நிதியம் ஸ்தாபிக்கப்படும். நிதியை சேமிப்பதற்கான குழு மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் உறுப்பினராக அங்கம் வகிக்கிறார். இந்த குழுவின் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.
தற்போதைய நிலையில் இருந்து மீள்வதற்கு உரிய திட்டங்களை வகுப்பதற்கு தேவையான சட்டம் வெகுவிரைவில் இயற்றப்படும்.மீட்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படும் ஹெலிகொப்டர்கள் சிறந்த நிலையில் இல்லை. 05 விமானங்களை திருத்துவதற்கு விலைமனுகோரல் செய்யப்பட்டுள்ளது. விமானப்படையினர் தமது உயிரை அச்சுறுத்தலுக்குள்ளாக்கிக் கொண்டு மீட்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
புதிய விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் கொள்வனவு செய்யப்படும். அனர்த்த நிலைகளை தடுப்பதற்கு எதிர்காலத்துக்குரிய திட்டங்கள் வகுக்கப்படும். ஆறுகள், மலைகளுக்கு அருகாமையில் பெரும்பாலான வீடுகள் சட்டவிரோதமான முறையில் குடியிறுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமான முறையில் வீடுகளை அமைப்பதற்கு எதிராக கடுமையான சட்டமியற்றப்படும். கொழும்பு கொலன்னாவ பகுதியில் இவ்வாறான நிலையே காணப்படுகிறது.
அழகுமிக்க மலையகம் இன்று அழிவடைந்துள்ளது.இந்த நிலைமை மீண்டும் இடமளிக்க முடியாது.இயற்கை அனர்த்தத்தை எவராலும் தடுக்க முடியாது. ஆனால் அனர்த்தத்தால் ஏற்படும் விளைவுகளை தடுக்கும் திட்டங்கள் செயற்படுத்தப்படும்.இதனை தேசிய செயலாக கருதி எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மக்கள் இறந்து கிடக்கும் போது அதில் அரசியல் செய்ய வேண்டாம். அரசாங்கத்துடனான பிரச்சினையை அரசியல் ஊடாக தீர்த்துக் கொள்ளுங்கள். பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கி மக்களை அழிக்க முயற்சிக்காதீர்கள். அரசியலை தேர்தல் ஊடாக தீர்த்துக் கொள்ளுங்கள். அதனைத் தவிர்த்து வேறு வழியில்லை. நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கே உண்டு.
அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டு நான் செயற்படவில்லை. அரசிலமைப்பை மீறியதாக உயர்நீதிமன்றத்தால் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் எனக்கு அரசியலமைப்பு பற்றி குறிப்பிடுகிறார்கள்.எமக்கு பாடம் எடுக்காமல் கொலன்னாவ பகுதிக்கு சென்று 10 பேருக்கு உணவு பொதிகளை வழங்குங்கள் புண்ணியம் சரி கிடைக்கும். ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்று பிளவுப்படாமல் தேசிய சபை யாக செயற்படுவோம்.தற்போதைய இக்கட்டான நிலையில் பொது கொள்கையின் அடிப்படையில் செயற்படுவோம்.மக்கள் ஏன் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தார்கள் என்பதை மீள்பரிசீலனை செய்யுங்கள் என்று எதிர்க்கட்சிகளிடம் குறிப்பிட்டார்.





