தேசிய கல்வி மறுசீரமைப்பில் ஜனாதிபதி-பிரதமர் முரண்பாடு
பாடத்திட்டத்தில் வரலாறு மற்றும் அழகியற்கலை பாடங்கள் மாணவர்களின் விருப்பத்துக்குரிய பாடங்களாக மாற்றப்படும் என பிரதி கல்வி அமைச்சர் தெரிவிக்கிறார்.

அரசாங்கத்தின் கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையில் கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணிக்கும் ஜனாதிபதிக்குமிடையில் இடம்பெற்றுவரும் முரண்பாட்டை அரசாங்கம் தீர்த்துக்கொண்ட பின்னர் அதனை மக்களுக்கு முன்வைக்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறியதாலே அரசாங்கத்தின் கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் பாரிய விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தி கம்பஹா தொகுதி அமைப்பாளர் வருண ராஜபக்ஷ் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
நாட்டின் கல்வி திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். இதற்காக கடந்த காலங்களில் அமைச்சர்களாக இருந்த அகிலவிராஜ் காரியவசம், சுசில் பிரேமஜயந்த ஆகியோர் பல்வேறு தரப்பினரையும் அழைத்து கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர். என்றாலும் அரசாங்கம் மாறிய காரணத்தால் அந்த நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை.
இந்நிலையில் தற்போதைய அரசாங்கம் கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. அதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அரசாங்கம் இதுதொடர்பில் யாருடனும் கலந்துரையாடாமல், 40 வருடங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட கல்வி மறுசீரமைப்பு பிரேரணையில் இருந்து சில பகுதிகளை எடுத்துக்கொண்டு அவசரமாக இந்த பிரேரணையை தயாரித்துள்ளது.
ஆனால் இந்த பிரேரணையை யார் தயாரித்தது என பிரதமர் உள்ளிட்ட யாரும் தெரிவிப்பதில்லை.முன்னாள் கல்வி அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் தயாரித்த கல்வி மறுசீரமைப்பு பிரேரணைகளை புறக்கணித்துவிட்டே அரசாங்கம் இந்த பிரேரணையை தயாரித்திருக்கிறது.
அத்துடன் பாடத்திட்ட மறுசீரமைப்பில் கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் பிரதி கல்வி அமைச்சருக்கும் இடையில் முரண்பாடான கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. பாடத்திட்டத்தில் வரலாறு மற்றும் அழகியற்கலை பாடங்கள் மாணவர்களின் விருப்பத்துக்குரிய பாடங்களாக மாற்றப்படும் என பிரதி கல்வி அமைச்சர் தெரிவிக்கிறார். ஆனால் அந்த இரண்டு பாடங்களும் கட்டாய பாடங்கள் என கல்வி அமைச்சர் தெரிவிக்கிறார்.
அதேபோன்று 50 மாணவர்களுக்கு குறைவாக இருக்கும் பாடசாலைகளை மூடிவிட வேண்டும் எனவும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்திருக்கிறார். ஆனால் கொழும்பில் இருந்துகொண்டு அவ்வாறான தீர்மானங்களை எடுக்க முடியாது என பிரதமர் தெரிவிக்கிறார்.
அதனால் கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் இருக்கும் முரண்பாடுகளை அரசாங்கத்துக்குள் கலந்துரையாடி தீர்த்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் அதனை மக்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு இல்லாத காரணத்தினாலே தற்போது அரசாங்கம் முன்வைத்திருக்கும் கல்வி மறுசீரமைப்பு பிரேரணை தொடர்பில் கல்வி துறையுடன் தொடர்புபட்ட தரப்பினர் கடும் எதிர்ப்பையும் விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
எனவே அரசாங்கம் கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி அவர்களின் ஆலாேசனைகளையும் பெற்றுக்கொண்டு இதனை சமர்ப்பித்திருந்தால், இவ்வாறு முரண்பாடுகள் வந்திருக்காது. அரசாங்கத்தின் இயலாமையே இதற்கு காரணமாகும் என்றார்.