வியட்நாம் இலங்கைக்கு இடையிலான உறவை வலுபடுத்துவது அவசியம்: வியட்நாம் தூதுவர்
இலங்கை தற்போது அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் அடைந்துள்ள முன்னேற்றத்தை வியட்நாம் தூதுவர் பாராட்டியதோடு, அது குறித்து தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.
பரஸ்பர நம்பிக்கை மற்றும் அபிவிருத்தி இலக்குகளைப் பயன்படுத்தி இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் உறுதிப்படுத்துவது அவசியம் என இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ரின் தி டாம் சுகாதார அமைச்சரிம் வலியுறுத்தியுள்ளார்.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ரின் தி டாம் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சில் இடம்பெற்றிருந்தது. இந்த சந்திப்பில் இலங்கை மற்றும் வியட்நாமுக்கு இடையில் நிலவும் இராஜதந்திர உறவுகள் மற்றும் அந்த உறவுகளை எதிர்காலத்திலும் வலுவாக முன்னெடுத்துச் செல்வது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
வியட்நாமின் ஒத்துழைப்புடன் தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது. அத்துடன், நாட்டின் சுகாதார சேவையின் தற்போதைய செயல்பாடுகள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கானத் தேவைகள், விவசாயம், சுற்றுலாத்துறை, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார், முதலீட்டு ஊக்குவிப்புத் திட்டங்கள் ஆகியவை தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வருடாந்த இருதரப்பு வர்த்தகம் மற்றும் ஊடகத்துறை, தொடர்பாடல் துறைகளில் வியட்நாம் பெற்றுள்ள அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளுவது தொடர்பிலும் தூதுவர் கருத்து தெரிவித்தார். வியட்நாம் ஒரு நாடாகப் பெற்றுள்ள வெற்றிகளை இலங்கையில் வினைத்திறனாக பயன்படுத்துவது குறித்து இங்கு ஆலோசிக்கப்பட்டது.
இலங்கை மற்றும் வியட்நாமுக்கு இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை நினைவுகூர்ந்த அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே அரசியல், இராஜதந்திர மற்றும் பொருளாதாரத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
இதன்போது, இலங்கை தற்போது அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் அடைந்துள்ள முன்னேற்றத்தை வியட்நாம் தூதுவர் பாராட்டியதோடு, அது குறித்து தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.
பரஸ்பர நம்பிக்கை மற்றும் அபிவிருத்தி இலக்குகளைப் பயன்படுத்தி இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது அவசியம். 1970 ஆம் ஆண்டு இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்ட பின்னர், வியட்நாமும் இலங்கையும் கடந்த 55 ஆண்டுகளாக வலுவான மற்றும் தொடர்ச்சியான உறவைப் பேணி வருகின்றன என்றார்.





