நோயாளிகளை பணயம் வைத்து போராடுவதில் நியாயமில்லை: அமைச்சர் நளிந்த
நெருக்கடியான நிலையில் அநீதியான முறையில் இந்த நேரத்தில் நோயாளர்களை பணயமாக வைத்துக்கொண்டு 48 மணித்தியாலம் அல்லது ஒரு வாரம், இரண்டு வாரம் என்று போராட்டங்களை நடத்துவது நியாயமல்ல.
நாடு மிக மோசமான அனர்த்தத்தை எதிர்க்கொண்டு அதில் மீள்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் நோயாளிகளை பணயம் வைத்து மருத்துவ அதிகாரிகள் போரட்டத்தில் ஈடுபடுவது நியாயமற்றது. இயலுமான வகையில் அரச சேவையாளர்களுக்கு சம்பளத்தை அதிகரித்துள்ளோம்.நியாயமற்ற போராட்டத்தை ஊக்குவிக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சியினரை கேட்டுக்கொள்கின்றேன் என்று சுகாதாரத்துறை மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 23-01-2026 அன்று நடைபெற்ற பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது: பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் 48 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். சுகாதார துறையில் வைத்தியர்கள் பெரும் பங்களிப்பை வழங்குகின்றனர். வழமையான சேவைகளின் போது மட்டுமன்றி இயற்கை அனர்த்தங்கள், கொவிட் போன்ற தொற்றுப்பரவல் உள்ளிட்ட முக்கிய காலப்பகுதியிலும் இவர்களின் பங்களிப்பு முக்கியமானது.
இவர்களுக்காக எமது அரசாங்கம் தேவையான கௌரவத்தை வழங்குகின்றது. விசேட வைத்திய நிபுணர்களை இந்த நாட்டிலேயே வைத்திருக்க தேவையான வசதிகளையும் அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் நாங்கள் நாட்டை பொறுப்பேற்று நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன்,சுகாதார துறையினர் உள்ளிட்ட அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையில் வைத்தியர்களின் அடிப்படை சம்பளமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
50 நாட்களுக்கு முன்னர் நாடு அனர்த்த நிலைமையொன்றுக்கு முகம்கொடுத்தது. 1200 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் மீள் கட்டமைப்புக்காக 500 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளோம். ஆனால் முன்னர் அறிவிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட கொடுப்பனவுகள் எதனையும் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவை வழங்கப்படுகின்றன.
இவ்வாறான நெருக்கடியான நிலையில் அநீதியான முறையில் இந்த நேரத்தில் நோயாளர்களை பணயமாக வைத்துக்கொண்டு 48 மணித்தியாலம் அல்லது ஒரு வாரம், இரண்டு வாரம் என்று போராட்டங்களை நடத்துவது நியாயமல்ல.
இதற்கு ஊக்கமளிக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சியினரை கேட்டுக்கொள்கின்றேன். ஏன் எதிர்க்கட்சியினர் இந்த விடயம் தொடர்பில் கதைக்காமல் இருப்பது ஏன்? அதிக சம்பளம் கிடைக்கும் போதும் நோயாளர்களை பணயமாக வைத்து முன்னெடுக்கும் போராட்டம் நியாயமானது அல்ல. பொருளாதாரம் அபிவிருத்தியடையும் போது நாங்கள் நிவாரணங்களை வழங்குவோம்.
அக்கறைப்பற்று, தெகியத்தகண்டி மற்றும் கண் வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டம் அநீதியானது என்று தெரிந்துகொண்டும் நாங்கள் சில தீர்மானங்களை எடுத்தமையானது மக்களுக்கு தொடர்ச்சியான சுகாதார சேவையை வழங்க வேண்டும் என்பதற்காகவே ஆகும்.
ஆனால் தொடர்ந்தும் வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னெடுத்து நோயாளர்களை பணயம் வைக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் போராட்டத்தை நாங்கள் கண்டிக்கின்றோம். இவ்வாறான போராட்டங்களை நிறுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.





