கொழும்பில் 77ஆவது இந்திய குடியரசு தின கொண்டாட்டம்
இந்திய கடலோர காவல்படையின் 'வராஹா' மற்றும் 'அதுல்யா' ஆகிய இரண்டு கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்தியாவின் 77ஆவது குடியரசு தினத்தை 26-01-2026 அன்று கொழும்பில் கொண்டாடியது. உலகின் மிக நீளமான எழுதப்பட்ட அரசியலமைப்பான இந்திய அரசியலமைப்பு, 1950 ஜனவரி 26 ஆம் திகதி நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் இந்திய குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் உத்தியோகபூர்வ இந்திய இல்லத்தில் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. உயர்ஸ்தானிகரால் இந்திய தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு, நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. நிகழ்வில் இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின உரையின் முக்கிய பகுதிகளையும் உயர்ஸ்தானிகர் வாசித்தார்.
இந்நிகழ்வில் இலங்கை கடற்படை இசைக்குழுவின் தேசபக்தி பாடல்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயத்தின் கலாசாரப் பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இந்தியாவின் செழுமையான பன்முகத்தன்மையை பறைசாற்றும் வகையில் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன.
இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடையும் ஒரு மைல்கல் ஆண்டாகவும் இது அமைகிறது. இந்த நிகழ்வுகள் ஆரம்பமாக முன்னர், இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவுச் சின்னத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மேலும், இந்திய கடலோர காவல்படையின் 'வராஹா' மற்றும் 'அதுல்யா' ஆகிய இரண்டு கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன. மேலும் குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று மாலை இந்திய இல்லத்தில் உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகள், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை அம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகங்கள் மற்றும் கண்டியிலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயம் ஆகியவையும் சிறப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து இந்தியாவின் 77ஆவது குடியரசு தினத்தை கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.





