தங்காலை சுற்றிவளைப்பில் ஒட்டுமொத்தமாக 705 கிலோ போதைப்பொருட்கள் மீட்பு
284 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 420 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
தங்காலையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் ஒட்டுமொத்தமாக 705 கிலோ கிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, வெ வ்வேறு பொலிஸ் குழுக்களால் வெ வ்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் எப்.யூ.வூட்லர் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 23-09-2025 அன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
திங்களன்று தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவரின் சந்தேகத்துக்கிடமான மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதற்கமைய தங்காலை – கஹாவத்துரகொட, சீனிமோதர உள்ளிட்ட பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 705 கிலோ கிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதற்கமைய 284 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 420 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. இவை கைப்பற்றப்பட்ட இடத்தின் உரிமையாளர் தொடர்பில் விசேட விசாரணைக்குழுவின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த சுற்றிவளைப்புக்களின் போது டி 56 ரக துப்பாக்கி, ரிவோல்வர் ரக துப்பாக்கிகள் 5, மோட்டார் சைக்கிளொன்று மற்றும் 3 லொறிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவை தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் இவ்வாண்டு இதுவரையான காலப்பகுதிக்குள் ஒட்டுமொத்தமாக 1243 கிலோ ஹெரோயின், 1845 கிலோ ஐஸ், 472 கிலோ ஹசீஸ், 29 கிலோ கொக்கெயின், 14 507 கிலோ கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சுற்றிவளைப்புக்கள் தொடர்பில் பல்வேறு பொலிஸ் குழுக்கள் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன. விசாரணைகளில் எவ்வித பின்னடைவும் இல்லை என்றார்.





