உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விதந்துரைகளை அமலாக்க நிபுணர் குழு நியமனம்
ஆணைக்குழுக்களின் அறிக்கைகளின் பரிந்துரைகள் மற்றும் யோசனைகளை அமல்படுத்துவது குறித்து அமைச்சரவையால் தீர்மானிக்க முடியாது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளை அமல்படுத்துவதற்காக நிபுணர் ஒருவருடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதோடு குறித்த அறிக்கைகளின் பரிந்துரைகள் முறையாக அமல்படுத்தப்படுமென அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் 22-04-2026 அன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான அறிக்கை விதந்துரைகளை பிரயோக ரீதியாக அமல்படுத்துவதை கண்காணிப்பதற்காக முறைசார்ந்த நிரந்தர பொறிமுறையொன்று இதுவரை தாபிக்கப்படாமையால், குறித்த விதந்துரைகளை அமல்படுத்துவதன் பெறுபேறுகளை மதிப்பீடு செய்வதற்கு முறையொன்று இல்லை.
அதனால், குறித்த விதந்துரைகளை வெற்றிகரமாக அமல்படுத்துவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட விரிவான ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட கட்டமைப்புடன் கூடிய பொறிமுறையொன்றை தாபிக்கவேண்டியதன் தேவை கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய ஜனாதிபதி செயலகத்தின் கண்காணிப்பின் கீழ் குறித்த அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் செயற்பாடுகள் மற்றும் தேசிய பாதுகாப்பு விடயப்பரப்பு தொடர்பான நிபுணர் ஒருவருடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஆணைக்குழுக்களின் அறிக்கைகளின் பரிந்துரைகள் மற்றும் யோசனைகளை அமல்படுத்துவது குறித்து அமைச்சரவையால் தீர்மானிக்க முடியாது. விசாரணை அறிக்கைகள் 2021 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பரிந்துரைகளுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை முறையாக அமல்படுத்த ஒரு பொறிமுறை வகுக்கப்படவில்லை.
குறித்த துறைசார் நிபுணர்கள் இந்த பரிந்துரைகளை ஆராய்ந்து உரிய அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அதனை அடிப்படையாகக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.





