வியட்நாம் தூதுவர் - டில்வின் சில்வா இடையே சந்திப்பு
கடந்த ஜனவரி 20 முதல் 23 வரை ஹனோயியில் நடைபெற்ற வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் 14ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜே.வி.பி-யினருக்கு விளக்குவதே இந்த சந்திப்பின் நோக்கமாகும்.
வியட்நாம் தூதுவர் ட்ரின் தி தாம் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்றுமுன்தினம் புதன்கிழமை பெலவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
கடந்த ஜனவரி 20 முதல் 23 வரை ஹனோயியில் நடைபெற்ற வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் 14ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜே.வி.பி-யினருக்கு விளக்குவதே இந்த சந்திப்பின் நோக்கமாகும்.
இச்சந்திப்பின் போது, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் 14ஆவது தேசிய மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து தூதுவர் ட்ரின் தி தாம் விளக்கமளித்தார். இந்த மாநாட்டின் போது, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியும் அந்நாடும் 2026 - 2030 காலப்பகுதிக்கான இலக்குகளை நிர்ணயித்துள்ளதுடன், 2035 மற்றும் 2045 ஆகிய ஆண்டுகளுக்கான இரண்டு நீண்டகால இலக்குகளை அடைவதற்கும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டது.
தற்போதைய மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொள்ள வியட்நாமும் இலங்கையும் எவ்வாறு தயாராகி வருகின்றன என்பது குறித்தும் இதன்போது கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இந்த சந்தர்ப்பத்தில், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் 14ஆவது தேசிய மாநாட்டில் பொதுச் செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள டோ லாமுக்கும், புதிதாக நியமிக்கப்பட்ட மத்திய குழுவுக்கும் ஜே.வி.பி பொதுச் செயலாளர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், அவர்களின் எதிர்காலப் பணிகள் வெற்றியடையவும் வாழ்த்தினார்.
இந்த சந்திப்பில் ஜே.வி.பி சார்பாக மத்திய குழு உறுப்பினரும் ஊடக மற்றும் சுகாதார அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ, நிறுவனங்களுக்கு இடையிலான ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜனக அதிகாரி மற்றும் ஜே.வி.பி சர்வதேச குழு உறுப்பினர் கல்பனா மதுபாஷினி ஆகியோர் கலந்துகொண்டனர். வியட்நாம் குடியரசு சார்பாக தூதரகத்தின் பிரதித் தலைவர் லே வான் {ஹவாங், முதன்மைச் செயலாளர் நுயென் வான் பின் மற்றும் தூதுவரின் செயலாளர் ரம்யா நிலங்கனி ஆகியோர் கலந்துகொண்டனர்.





