இலங்கையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அவசியமான கூறுகளைப் புரிந்துகொள்ள இவ்விஜயம் உதவும் - ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர்
இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர், பொருளாதார மீட்சி, அபிவிருத்தி நிதியளிப்பு மற்றும் இலங்கைக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல் என்பன தொடர்பில் பரந்துபட்ட கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.
பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தல், முக்கிய பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளல் மற்றும் 'தித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் சேதங்களை நேரில் ஆராய்தல் ஆகிய நோக்கங்களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்டோ கன்டா 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு 23-03-2026அன்று நாட்டை வந்தடைந்தார்.
அரசாங்கம், தனியார் துறையினர் மற்றும் உள்ளுர் சமூகங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும், அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அவசியமான முக்கிய கூறுகளை நன்கு புரிந்துகொள்வதற்கும் இந்தப் பயணம் சிறந்த வாய்ப்பாக அமையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன்படி நேற்றைய தினம் கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் மஸாட்டோ கன்டாவை தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ வரவேற்றார். அதனைத்தொடர்ந்து நேற்று முற்பகல் கொழும்பு துறைமுக வளாகத்துக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட அவர், பின்னர் கொழும்பில் தனியார் துறை பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்றிலும் பங்கேற்றார்.
அதேவேளை இன்றைய தினம் (24) மஸாட்டோ கன்டா உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் 'தித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குக் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். அதன் ஓரங்கமாக பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அம்பலங்கந்த பகுதிக்குச் சென்று, அங்கு வசிக்கும் மக்களுடன் கலந்துரையாடி, சேதங்கள் தொடர்பான நேரடி மதிப்பீட்டை மேற்கொள்வதற்கும் அவர்கள் உத்தேசித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர், பொருளாதார மீட்சி, அபிவிருத்தி நிதியளிப்பு மற்றும் இலங்கைக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல் என்பன தொடர்பில் பரந்துபட்ட கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.
இலங்கைக்கான இவ்விஜயம் குறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் மஸாட்டோ கன்டா, இலங்கை முகங்கொடுத்திருந்த நெருக்கடி நிலையை சமாளித்து, மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் ஒரு முக்கியமான தருணத்திலேயே தான் இவ்விஜயத்தை மேற்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு உட்கட்டமைப்பு மற்றும் இணைப்பை வலுப்படுத்துவதன் மூலமும், தனியார் துறையை மையப்படுத்திய வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான முதலீடுகளைத் திரட்டுவதன் மூலமும் இலங்கையின் முன்னேற்றத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஆதரவளித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.





