மாகாணசபை தேர்தலை இலக்காகக் கொண்டு வரவு - செலவு திட்டம்: ஐக்கிய மக்கள் சக்தி சாடல்
அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்டிருந்த 4 அமைச்சுக்களில் முன்னெடுக்கப்படவிருந்த வேலைத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியில் 36.6 பில்லியன் ரூபா பயன்படுத்தப்படாமையால், அடுத்த ஆண்டு செலுத்தப்பட வேண்டிய கடனுக்காக மீள செலுத்தப்பட்டுள்ளது.

மாகாணசபை தேர்தலும் நடத்தப்பட வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ள முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாகும். இனியும் அரசாங்கத்தால் மாகாணசபைத் தேர்தலை காலம் தாழ்த்த முடியாது. எனவே தேர்தலுக்கு முன்னர் அழகிய வசனங்களால் ஆன வரவு - செலவு திட்டமே நவம்பரில் முன்வைக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் 13-10-2025அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த ஆட்சி காலங்களில் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட போது, யாரை மாற்றினாலும் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என ஜே.வி.பி. விமர்சனங்களை முன்வைத்தது. அதே விமர்சனங்களை இன்று இந்த அரசாங்கத்தைப் பார்த்து எம்மால் முன்வைக்க முடியும்.
அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்டிருந்த 4 அமைச்சுக்களில் முன்னெடுக்கப்படவிருந்த வேலைத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியில் 36.6 பில்லியன் ரூபா பயன்படுத்தப்படாமையால், அடுத்த ஆண்டு செலுத்தப்பட வேண்டிய கடனுக்காக மீள செலுத்தப்பட்டுள்ளது.
இயாமையுடைய ஒரு அமைச்சரிடமிருந்து அமைச்சுக்கள் நீக்கப்பட்டு, பிரிதொரு இயாமையுடைய அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அது மாத்திரமின்றி தமது அரசாங்கத்தில் 25 அமைச்சரவை அமைச்சுக்களும், 25 பிரதி அமைச்சர்களும் மாத்திரமே நியமிக்கப்படுவர் எனக் கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த வரையறைகளைக் கடந்து தமது விருப்பத்துக்கேற்ப அமைச்சுப் பதவிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். அரசாங்கத்தின் இயலாமை தற்போது வெளிப்படத் தொடங்கியுள்ளதால், மக்கள் மத்தியில் எதிர்ப்புக்கள் அதிகரித்துள்ளன.
அரசாங்கத்தின் திறனற்ற நிர்வாகத்தால் வறுமை நிலை 33 சதவீதத்திலிருந்து 47 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இவர்கள் ஆட்சியைப் பொறுப்பேற்கும் போது மீள் செலுத்த வேண்டிய கடன் 93 பில்லியன் டொலராகக் காணப்பட்டது. அந்த தொகை தற்போது 105 பில்லியன் டொலர் வரை உயர்வடைந்துள்ளது. கடந்த ஆட்சி காலங்களில் இவர்களது ஆர்ப்பாட்டங்களால் கைவிடப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை இன்று பல மில்லியன் டொலர் நஷ்டத்துவடன் இவர்களாலேயே மீள ஆரம்பிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. மாகாணசபைத் தேர்தலில் இதற்கான பிரதி பலன் அரசாங்கத்துக்கு கிடைக்கும்.
தாம் விருப்பத்துடனேயே மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாகக் காண்பிப்பார்கள். மாகாணசபைத் தேர்தலும் நடத்தப்பட வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ள முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாகும். இனியும் இவர்களால் மாகாணசபைத் தேர்தலை காலம் தாழ்த்த முடியாது. எனவே தேர்தலுக்கு முன்னர் அழகிய வசனங்களால் ஆன வரவு - செலவு திட்டத்தை நவம்பரில் முன்வைப்பார்கள். ஒன்றை மறைத்து மற்றொன்றை காண்பிக்கும் வரவு - செலவு திட்டத்தை பார்க்கக் கூடியதாக இருக்கும்.
வரி அதிகரிக்கப்பட மாட்டாது எனக் கூறுகின்றனர். அவ்வாறெனில் தேர்தலுக்கு முன்னர் கூறியதைப் போன்று வரி குறைக்கப்படுமா? மின்சாரக் கட்டணம், நீர் கட்டணம் குறைக்கப்படுமா? மக்கள் ஆணை வழங்கிய இந்த காரணிகள் இந்த வரவு - செலவு திட்டத்திலாவது நிறைவேற்றப்படுமா? இதற்கான பதிலை அரசாங்கம் வழங்காவிட்டால், அரசாங்கத்துக்கு மக்கள் சிறந்த பதிலளிப்பர் என்றார்.