இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகராக இஸபெல் மார்ட்டின்
கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அவர் கனேடிய அரசாங்கத்தினால் கட்டாருக்கான தூதுவராக நியமிக்கப்பட்டார்.
இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷின் பதவிக்காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், புதிய கனடிய உயர்ஸ்தானிகராக இஸபெல் மார்ட்டின் நியமிக்கப்படவிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
1996 ஆம் ஆண்டு கனடாவின் வெளிவிவகார மற்றும் சர்வதேச வர்த்தகத் திணைக்களத்தில் இணைந்துகொண்ட இஸபெல் மார்ட்டின், நீண்டகாலமாக இராஜதந்திர சேவையில் பணியாற்றிவருகிறார்.
கனடாவின் இராஜதந்திர சேவையின் பணிப்பாளராகவும் அச்செயன்முறைத்திட்டத்தின் பிரதித்தலைவராகவும் 2010 - 2013 ஆம் ஆண்டு வரை சேவையாற்றிய இஸபெல் மார்ட்டின், 2018 ஆம் ஆண்டு வரை கனேடிய பூகோள விவகாரங்கள் பிரிவில் தேசிய பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கான சிறப்பு ஆலோசகராகப் பணியாற்றினார்.
அதேபோன்று வெளிநாட்டு இராஜதந்திர சேவையைப் பொறுத்தமட்டில் 1998 - 2008 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அவர் கைரோ, அபுதாபி மற்றும் லண்டன் ஆகிய நகரங்களில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
அதேவேளை 2018 - 2022 ஆம் ஆண்டு வரை இஸபெல் மார்ட்டின் கன்பராவில் பிரதி உயர்ஸ்தானிகராகவும், அரசியல் செயற்திட்டப் பணிப்பாளராகவும் கடமையாற்றினார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அவர் கனேடிய அரசாங்கத்தினால் கட்டாருக்கான தூதுவராக நியமிக்கப்பட்டார்.
லவல் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தில் இளமாணிப் பட்டபடிப்பையும், சர்வதேச கற்கைநெறிகளுக்கான குயின்ஸ்பேக் பட்டப்படிப்பு நிலையத்தில் சர்வதேச தொடர்புகளில் முதுமாணிப் பட்டப்படிப்பையும் பூர்த்திசெய்த இஸபெல் மார்ட்டின், தற்போது இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.





