2026 வரவு, செலவு திட்டத்தில் வரி ஈய்ப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்த திட்டம்
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, அந்நிய நேரடி முதலீடுகள் மற்றும் ஏற்றுமதிகளை அதிகரித்து அந்நிய செலாவணியை திரட்டக்கூடிய நடவடிக்கைகளையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது.
2026 ஆம் ஆண்டு நிதியாண்டுக்குரிய வரவு, செலவுத் திட்டத்தை ஜனாதிபதி எதிர்வரும் 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
அடுத்த ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் ஏற்றுமதியாளர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு சலுகைகளும், அத்தியாவசிய பொருட்களுக்கு நிவாரணமும் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேநேரத்தில் வரி ஈய்ப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது.
வரி வசூலை உறுதி செய்வதன் மூலம் இலங்கை சுங்கம், உள்நாட்டு இறைவரி மற்றும் மதுவரி திணைக்களம் ஆகியவற்றுக்கு வருமான இலக்குகளை உயர்த்துவதே, இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
அதன்படி, இந்த மூன்று நிறுவனங்களுக்கும், 4.6 டிரில்லியன் என்ற மதிப்பிடப்பட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய இலக்கை காட்டிலும், 600 மில்லியன் ரூபா அதிகரிப்பைக் குறிக்கிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, அந்நிய நேரடி முதலீடுகள் மற்றும் ஏற்றுமதிகளை அதிகரித்து அந்நிய செலாவணியை திரட்டக்கூடிய நடவடிக்கைகளையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது.
அத்துடன், வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரிகளும் மாறாமல் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. குறைந்த வருமானம் கொண்ட குழுக்களுக்கு, அரசாங்கம் பாதீட்டில் நிவாரணப் பொதியை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் 2025 ஜூன் இறுதி நிலவரப்படி அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன் 37.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
மொத்த அரச வெளிநாட்டு கடனில் பலதரப்புக் கடன் 36 சதவீதமாகும். அதைத் தொடர்ந்து வணிக கடன் 34 சதவீதமாகவும், இருதரப்பு கடன் 30 சதவீதமாகவும் உள்ளது.





