சமுத்திரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இலங்கை கடற்படைக்கு அனுமதி
சர்வதேச கடற் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற வணிகக் கப்பல்களுக்கு செங்கடல் மற்றும் ஈடின் வளைகுடா உள்ளிட்ட சோமாலியா சமுத்திர வலயத்தில் கடல் கொள்ளையர்களின் செயற்பாடுகளால் சர்வதேச சமுத்திரவியல் அமைப்பு, குறித்த கடற் பிராந்தியங்கள் அதிக ஆபத்துக் கொண்ட வலயங்களாக 2010 ஆம் ஆண்டிலிருந்து பிரகடனப்படுத்தியுள்ளது.

சமுத்திரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இலங்கை கடற்படைக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக என்று அமைச்சரவைப் பேச்சாளர் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றையதினம் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச கடற் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற வணிகக் கப்பல்களுக்கு செங்கடல் மற்றும் ஈடின் வளைகுடா உள்ளிட்ட சோமாலியா சமுத்திர வலயத்தில் கடல் கொள்ளையர்களின் செயற்பாடுகளால் சர்வதேச சமுத்திரவியல் அமைப்பு, குறித்த கடற் பிராந்தியங்கள் அதிக ஆபத்துக் கொண்ட வலயங்களாக 2010 ஆம் ஆண்டிலிருந்து பிரகடனப்படுத்தியுள்ளது.
இவ் அச்சுறுத்தலுக்கு தீர்வாக அதிக ஆபத்துக் கொண்ட வலயங்களுக்குள் உள்நுழைகின்ற வணிகக் கப்பல்களால் வெளிநாட்டு தனியார் சமுத்திரப் பாதுகாப்புக் கம்பனிகள் மூலம் ஆயுதங்கள் தாங்கிய சமுத்திரப் பாதுகாவலர்களின் சேவைகள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. 2023.01.01 ஆம் திகதி தொடக்கம் குறித்த வலயங்கள் அதிக ஆபத்துக் கொண்ட வலயத்தை நீக்கி சர்வதேச சமுத்திரப் பாதுகாப்பு அமைப்பு பிரகடனப்படுத்தி இருப்பினும், வணிகக் கப்பல்கள் தொடர்ந்து தனியார் சமுத்திரப் பாதுகாப்பு கம்பனிகளின் சேவைகளை தொடர்ந்தும் பெற்றுக் கொள்கின்றன.
குறித்த கடல் வலயங்களுக்கு உள்நுழைகின்ற கப்பல்களில் ஆயுதங்கள் தாங்கிய சமுத்திரப் பாதுகாலர்களை ஏற்றுவதற்கும், வெளியேறுகின்ற கப்பல்களில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட ஆயுதம் தாங்கிய சமுத்திரப் பாதுகாவலர்களை இறக்குவதற்கும், பிரதானமாக காலி மற்றும் கொழும்புத் துறைமுகங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதுடன், ஒரு சில சந்தர்ப்பங்களில் அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்களிலும் இவ்வாறாக சமுத்திர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறித்த கருத்திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது தேசியப் பாதுகாப்பு தொடர்பான முழுமையான பொறுப்பு இலங்கை கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆகவே, சமுத்திரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி இலங்கையை கடற் படையிடமுள்ள அறிவு மற்றும் அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, சமுத்திரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை சுயாதீனமாக மேற்கொள்வதற்கு இலங்கை கடற்படைக்கு அனுமதி வழங்குவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பின் கீழ் சமுத்திரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை கடற்படை மூலம் மேற்கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.