நான்கு முக்கிய தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
எந்தவொரு விளையாட்டு சம்மேளனத்திற்கும் இடைக்கால குழுக்களை நியமிக்கப்போவதில்லை என அரசாங்கம் உறுதியாக நம்புவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கை சைக்கிள் சம்மேளனம், இலங்கை ரக்பி சம்மேளனம், இலங்கை வாகன கூட்டமைப்பு மற்றும் இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம் ஆகிய நிறுவனங்களை இடைநிறுத்தி விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் (ரியர் அட்மிரல்) ஷெமால் பெர்னாண்டோ அவர்களை குறித்த தேசிய விளையாட்டு நிர்வாக சபைகளுக்கான அலுவலக பொறுப்பாளர்களின் தேர்தலை நடத்தும் மட்டுப்படுத்தப்பட்ட நோக்கத்திற்காக மட்டுமே தகுதிவாய்ந்த அதிகாரியாக நியமித்துள்ளது.
எந்தவொரு விளையாட்டு சம்மேளனத்திற்கும் இடைக்கால குழுக்களை நியமிக்கப்போவதில்லை என அரசாங்கம் உறுதியாக நம்புவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 32 மற்றும் 33 ஆம் பிரிவுகள் மற்றும் அதன் திருத்தங்களின் கீழ் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட விளையாட்டு சம்மேளனங்களின் பதிவை தற்காலிகமாக இடைநிறுத்துகிறார் என்று வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி விளையாட்டு சம்மேளனத்தின் நிர்வாக மற்றும் பிற தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும், உரிய தேர்தல்களை நடத்துவதற்கும், அதுவரை கடமைகளை உரிய முறையில் மேற்கொள்வதற்கும் ஒரு தற்காலிக பொறிமுறையாக 2024 மே 29 ஆம் திகதி முதல் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் (ரியர் அட்மிரல்) ஷெமால் பெர்னாண்டோ தகுதிவாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.