காணாமல்போனோருக்கு என்ன நேர்ந்தது?: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்
மோதலொன்றுடன் தொடர்புடைய அரசுகளும், ஏனைய தரப்புக்களும் காணாமல்போனோர் பற்றிய பிரச்சினையைக் கையாள்வதற்கு நடவடிக்கை எடுக்கும் விதமானது, நீண்டகால அடிப்படையில் சமூகத்தை வடிவமைக்கிறது.
காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்பதற்கான பதில்களும், அங்கீகாரங்களும் இல்லாதிருப்பதானது வெறுப்பைத் தூண்டுவதுடன் குடும்ப வரலாறுகள், அடையாளங்கள் மற்றும் சந்ததிகளைக் கடந்த நினைவுகள் என்பவற்றில் தாக்கங்களை ஏற்படுத்தும். அர்த்தமுள்ள பதிலளிப்பு இல்லாதவிடத்து, காயங்கள் ஆறாமல் நீடிக்கும் அதேவேளை, நல்லிணக்கத்தை அடைந்துகொள்வதும் சிரமமாகும். எனவே சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் அடைந்துகொள்வதற்கு காணாமல்போனோர் பற்றிய பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது இன்றியமையாததாகும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
30-08-2025 வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகும். ஆயுதமோதல்கள், ஏனைய வன்முறைகள், அனர்த்தங்கள், மனிதாபிமான நெருக்கடிகள், புலம்பெயர்வு போன்ற நிலைமைகளால் காணாமல்போன அல்லது தமது குடும்பங்களைவிட்டுப் பிரிந்த இலட்சக்கணக்கானோருடனான எமது உடன்நிற்பை வெளிப்படுத்துகிறோம்.
கடந்த ஆண்டின் முடிவில் உலகம் முழுவதிலும் 284,000 க்கும் மேற்பட்டோர் காணாமல்போயிருப்பதாக செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கத்தின் குடும்பத்தொடர்பு வலைப்பின்னலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது காணாமல்போனோரின் உண்மையான எண்ணிக்கையில் ஒரு சிறுபகுதி மாத்திரமேயாகும். காணாமல்போன ஒவ்வொரு நபரின் பின்னாலும் தமது அன்புக்குரியவருக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியமுடியாத வலியுடன் போராடும் குடும்பமொன்று பதற்றத்துடனும், நிச்சயமற்ற தன்மையுடனும் வாழ்கிறது. தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது அல்லது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை அறியமுடியாத நிலையின் தாக்கமானது, அந்த குடும்பங்களை துக்கத்தை அனுஷ்டிக்க முடியாதவர்களாகவும், தொடர்ச்சியான எதிர்பார்ப்புக்கும் விரக்திக்கும் இடையில் சிக்கியவர்களாகவும் வைத்திருக்கிறது.
அத்தோடு இந்த உளவியல் சுமைக்கு அப்பால், குறிப்பாக காணாமல்போனவர் குடும்பத்தில் பிரதான வருவாய் ஈட்டியவராக இருக்கும் பட்சத்தில், பொருளாதார, சட்ட மற்றும் நிர்வாக ரீதியான சவால்களும் சேர்ந்து அக்குடும்பங்களின் அவதியை அதிகப்படுத்தியுள்ளன. இந்த அவதிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமாயின், காணாமல்போன தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்விக்கான பதில் வழங்கப்படவேண்டியது அவசியம். அதனை அறிவதற்கான தேவையும், உரிமையும் அக்குடும்பங்களுக்கு இருக்கிறது. எனவே அக்குடும்பங்களுக்குச் செவிசாய்த்து, அவர்களது பன்முகப்பட்ட மற்றும் நீண்டகாலத் தேவைகளைத் தீர்ப்பதற்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமாகும்.
சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின்கீழ் மோதலொன்றுடன் தொடர்புடைய அரசுகளும், ஏனைய தரப்புக்களும் நபர்கள் காணாமல்போவதைத் தடுத்து நிறுத்துவதற்கும், காணாமல்போனோர் தொடர்பில் பொறுப்புக்கூறுவதற்கும், காணாமல்போனோர் பற்றித் தம்மிடமுள்ள தகவல்களை அவர்களது குடும்பத்தாருடன் பகிர்ந்துகொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இக்கடப்பாடுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சமவாயங்களிலும், பிரகடனங்களிலும் வலியுறுத்தப்பட்டிருப்பதுடன் மோதல்கள் முடிவடைந்ததன் பின்னரும்கூட இக்கடப்பாடுகள் நீடிக்கின்றன.
காணாமல்போனோரைத் தேடுவதற்கும், அவர்களது குடும்பத்தாருக்குப் பதிலளிப்பதற்கும் ஒருமுகப்படுத்தப்பட்டதும் நீடித்து நிலைக்கக்கூடியதுமான முயற்சிகள் அவசியம். சட்ட மருத்துவ முறைமைகள் உள்ளடங்கலாக தேசிய சட்ட மற்றும் நிறுவன ரீதியான சட்டங்களை வலுப்படுத்தல், காணாமல்போனோருக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிவதற்கான பொறிமுறைகளை ஸ்தாபித்தல், நபர்கள் காணாமல்போன சூழ்நிலை மற்றும் மனித எச்சங்கள் புதைக்கப்பட்ட இடங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுதல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் என்பன இதில் உள்ளடங்கும். இச்செயன்முறைகளில் காணாமல்போனோரின் குடும்பத்தாரை உள்வாங்குவதும், அவர்களது செயலூக்கமான பங்களிப்பை உறுதிசெய்வதும் இம்மனிதாபிமானப் பிரச்சினைக்கு அர்த்தபூர்வமானதும், நிலையானதுமான தீர்வை அடைந்துகொள்வது இன்றியமையாததாகும்.
மோதலொன்றுடன் தொடர்புடைய அரசுகளும், ஏனைய தரப்புக்களும் காணாமல்போனோர் பற்றிய பிரச்சினையைக் கையாள்வதற்கு நடவடிக்கை எடுக்கும் விதமானது, நீண்டகால அடிப்படையில் சமூகத்தை வடிவமைக்கிறது. இவ்விடயத்தில் விடை காணப்படாத சம்பவங்கள் வன்முறை தீர்ந்து நீண்டகாலம் கழிந்த பின்னரும் உளவியல் ரீதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி, மனத்தாங்கல்களைத் தீவிரமாக்கி, பிளவுகளை ஆழமாக்கக்கூடும். காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்பதற்கான பதில்களும், அங்கீகாரங்களும் இல்லாதிருப்பதானது வெறுப்பைத் தூண்டுவதுடன் குடும்ப வரலாறுகள், அடையாளங்கள் மற்றும் சந்ததிகளைக் கடந்த நினைவுகள் என்பவற்றில் தாக்கங்களை ஏற்படுத்தும். அர்த்தமுள்ள பதிலளிப்பு இல்லாதவிடத்து, காயங்கள் ஆறாமல் நீடிக்கும் அதேவேளை, நல்லிணக்கத்தை அடைந்துகொள்வதும் சிரமமாகும். எனவே சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் அடைந்துகொள்வதற்கு காணாமல்போனோர் பற்றிய பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது இன்றியமையாததாகும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.





