இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகிறார்
பல்வேறு விடயங்கள் தொடர்பில் ராஜ்நாத் சிங் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதுடன், கொழும்பில் உள்ள இந்திய சமூகத்தினரையும் சந்திக்கவுள்ளார்.
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை மறுதினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். ஏதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் மற்றும் பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும் நிலையில், ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் இடம்பெறவுள்ளது.
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: இந்த விஜயத்தின்போது இலங்கைத் தலைவர்களுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ராஜ்நாத் சிங் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதுடன், கொழும்பில் உள்ள இந்திய சமூகத்தினரையும் சந்திக்கவுள்ளார்.
இந்திய பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவுக்கும் அவர் தலைமை தாங்கவுள்ளார்.
இலங்கை–இந்தியா இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கு இந்த விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.
நீண்டகால நாகரிகத் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்ட இந்தியா–இலங்கை உறவுகள், பிராந்திய பாதுகாப்பு, பாதுகாப்புத்துறை, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விரிவடைந்துள்ளதாகவும் இந்திய தரப்பு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியின்போது இந்தியா வழங்கிய உதவிகளும், 2025ஆம் ஆண்டு தித்வா புயலின் தாக்கத்துக்குப் பின்னர் வழங்கிய ஆதரவும் இந்தியாவின் 'அயலுறவு முன்னுரிமை' கொள்கையின் கீழான ஒத்துழைப்புகளாக இந்திய தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.





