மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் அருந்திக பெர்னாண்டோ வாக்குமூலம்
03-09-2026அன்று குற்றப்புலனாய்வு பணியகத்தில் முன்னிலையான அவர், அதிகாரிகளால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நீண்டநேரம் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக் என்பவர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் அளிப்பதற்காக, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அழைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, நீண்ட நேர விசாரணைகளின் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
குறித்த போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்புபட்ட நபர்கள் மற்றும் தகவல்கள் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால், அது தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதுக்காக முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, 03-09-2026அன்று குற்றப்புலனாய்வு பணியகத்தில் முன்னிலையான அவர், அதிகாரிகளால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நீண்டநேரம் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சந்தேநபரான ஷிரான் பாசிக் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளுக்காக தெஹிவளை - கல்கிஸ்ஸ மாநகர சபையின் முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்கவும் கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.





