தித்வா புயலின் சீற்றத்தால் உயிரிழிப்புக்கள் 150ஐ கடந்தது: 203 பேர் மாயம்
மண் அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, குறித்த பகுதியிலிருந்து இரு சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளன.
நாட்டின் 25 மாவட்டங்களிலும் பாரதூரமான அழிவுகளை ஏற்படுத்திய 'தித்வா' புயல் கரையைக் கடக்கின்ற போதிலும், தொடர்ந்தும் பதிவாகிக் கொண்டிருக்கும் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் உள்ளிட்டவற்றால் பதிவான உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 159 வரை உயர்வடைந்துள்ளது. மேலும் 203 நபர்கள் காணாமல் போயுள்ளனர்.
மண்சரிவினால் பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களிலேயே அதிகளவான பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன. கண்டியில் 52 மரணங்கள் பதிவாகியுள்ளதோடு, 105 பேர் காணாமல் போயுள்ளனர். பதுளையில் 52 பேர் உயிரிழந்துள்ளதோடு, 42 பேர் காணாமல் போயுள்ளனர்.
அதற்கமைய நாடளாவிய ரீதியில் 2,34,503 குடும்பங்களைச் சேர்ந்த 8,33,985 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 34,198 குடும்பங்களைச் சேர்ந்த 122,822 நபர்கள் 919 தற்காலிக பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பன்னலையில் உள்ள முதியோர் இல்லம் ஒன்று வெள்ளத்தில் மூழ்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், அங்கிருந்த குறைந்தபட்சம் 11 முதியோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ச்சியான கனமழையால் குறித்த முதியோர் இல்லம் விரைவாக நீரில் மூழ்கியது. இதனால் பலர் உள்ளே சிக்கியுள்ளனர். எனினும் கடுமையான வானிலை நிலவியபோதிலும், அவசரகாலப் பணியாளர்களும் தன்னார்வலர்களும் சிரமமான நடவடிக்கைக்குப் பிறகு 14 பேரை மீட்டுள்ளனர்.
வெலிமடை - நுவரெலியா பிரதான வீதியில் கவரம்மன பிரதேசத்தில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதன் போது அங்கு வீதியிலிருந்து மண் அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த வீதி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர். சரி விழுந்த மண்மேட்டினை அகற்றிக் கொண்டிருந்த போதே, மீண்டுமொருமுறை பாரிய மண்சரிவு இடம்பெற்றதால் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. குறித்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த லொறி சாரதியொருவர் காணாமல் போயுள்ளதோடு, மண் சரிவிற்குள் சிக்கிய ஒருவர் மீட்கப்பட்டார்.
இதேவேளை வெலிமட - கெப்பெடிபொல பொலிஸ் நிலையத்துக்கருகில் ஏற்பட்ட மண் சரிவினால் வெலிமடை - நுவரெலியா பிரதான வீதி முற்றாக மூடப்பட்டது. மண் அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, குறித்த பகுதியிலிருந்து இரு சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளன.
அலவத்துகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அங்கும்பர வீதியில் ரம்புக்கெல கிராமத்தில் நேற்று அதிகாலை பாரிய மண்சரிவு பதிவாகியுள்ளது. குறித்த கிராமத்தில் வசித்து வந்த பெருமளவான மக்கள் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஆனால் அங்கு வாழ்ந்தவர்கள், காணாமல் போனோர் மற்றும் உயிரிழப்புக்கள் குறித்து எவ்வித தகவலும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு குழுக்களுக்கு குறித்த பகுதிக்கு செல்ல முடியாத நிலைமை காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





