நிலந்த ஜயவர்தன பொலிஸ் சேவையில் இருந்து நீக்கம்
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் தேசிய உளவுச்சேவையின் பணிப்பாளராக சிரேட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவே செயற்பட்டிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அப்போதைய தேசிய உளவுச்சேவையின் முன்னாள் பணிப்பாளராக இருந்து தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் அலட்சிய போக்குடன் செயற்பட்டமை தொடர்பில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஒழுக்காற்று விசாரணையில் அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டமையால் அவர் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் தேசிய உளவுச்சேவையின் பணிப்பாளராக சிரேட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவே செயற்பட்டிருந்தார்.
எவ்வாறாயினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி புலனாய்வுத் தகவல் கிடைத்திருந்த போதிலும் அது தொடர்பில் உரிய விசாரணை மேற்கொண்டு தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நிலந்த ஜயவர்தனவக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவித்து சில பரிந்துரைகளை முன்வைத்திருந்தது.
குறிப்பாக தாக்குதல் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற்றிருந்த போதிலும் அப்போதைய தேசிய உளவுச்சேவையின் பிரதானியாக செயற்பட்ட நிலந்த ஜயவர்தன, அதனைத் தடுக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அந்தப் புலனாய்வு தகவலை பாராதூரமான விடயமாக கருதாமல் வேண்டுமென்றே புறக்கணித்துள்ளதாகவும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்தத்தாக்குதல் தொடர்பில் நிலந்த ஜயவர்தனவும் பொறுப்பு கூற வேண்டும் எனவும் இதற்கமைய அவருக்கு எதிராக குற்றவியல் தண்டனைகோவை சட்டத்திற்கு அமைய குற்றவியல் வழக்கு தொடர வேண்டும் எனவும் அந்த பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டது.
மேலும் உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தனது சொந்த நிதியிலிருந்து 75 மில்லியன் ரூபா இழப்பீட்டை வழங்குமாறு நிலந்த ஜயவர்தனவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவும் பிறப்பித்திருந்தது.
இந்த பின்னணியில் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தொடர்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி முறையான ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்தது. இதற்கமைய மேற்கொண்ட ஓழுக்காற்று தொடர்பிலான விசாரணைக் குழுவின் அறிக்கை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு கடந்த 4 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டது.
அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட ஒழுக்காற்று விசாரணையில் அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டமையால் நிலந்த ஜயவர்தன சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.