நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொண்டால் பல விடயங்கள் வெளியாகும்: காவிந்த
நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொண்டால் உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பல விடயங்கள் வெளியாகும் என்று அரசாங்கம் அச்சமடைந்துள்ளது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொண்டால் உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பல விடயங்கள் வெளியாகும் என்று அரசாங்கம் அச்சமடைந்துள்ளது.சபாநாயகரின் ஒருதலைபட்சமான செயற்பாட்டை சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்துக்கு முறையிடுவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கு நீதியை பெற்றுத்தருவதாக குறிப்பிட்டே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது.ஆனால் இதுவரையில் உண்மை வெளிப்படுத்தப்படவில்லை.வாக்குறுதிகள் மாத்திரமே மிகுதியாகியுள்ளன.
குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவின் பெயர் சந்தேக நபராக குறிப்பிடப்பட்டுள்ளது.ஆகவே குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட நபர் பாதுகாப்பு பிரதி அமைச்சராக பதவி வகிக்கும் போது குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் எவ்வாறு சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்பதில் பாரிய சந்தேகம் காணப்படுகிறது.
இவ்வாறான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தான் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தோம்.போலியான காரணிகளை குறிப்பிட்டுக் கொண்டு இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகர் புறக்கணித்துள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொண்டால் உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பல விடயங்கள் வெளியாகும் என்று அரசாங்கம் அச்சமடைந்துள்ளது. வெளியாகும் பல விடயங்கள் அரசாங்கத்துக்கு எதிரானதாகவே அமையும்.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் செயற்பாடுகள் ஒருதலைபட்சமானது.நடுநிலையாக செயற்பட வேண்டிய சபாநாயகர் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்கவின் அறிவுறுத்தல் மற்றும் ஆலோசனைக்கு அமைவாக ஒருதலைபட்சமாக செயற்படுகிறார். சபாநாயகரின் ஒருதலைபட்சமான செயற்பாட்டை சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்துக்கு முறையிடுவோம் என்றார்.





