உண்மையை மூடிமறைக்க அரசாங்கம் முயற்சி: அநுராத ஜயரத்ன எம்.பி.
மழையுடனான காலநிலையின் போது நீர்பாசனத் திணைக்களம் செயற்பட்ட விதம் சந்தேகத்துக்குரியது.
தித்வா புயலை எதிர்க்கொள்ளுவதற்காக முன்னாயத்துடன் இருக்கவில்லை என்பது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் முன்வைக்க நியமிக்கப்படவுள்ள பாராளுமன்ற விசேட குழுவின் தலைமைத்துவத்தை தம்வசம் வைத்துக் கொண்டு உண்மையை மூடிமறைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.இது முற்றிலும் தவறானது. தலைமைத்துவ பதவி எதிர்க்கட்சிக்கு வேண்டும் என்று புதிய ஜனநாயக முன்னணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அநுராத ஜயரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 21-01-2026அன்று புதன்கிழமை நடைபெற்ற தித்வா புயலின் பின்னர் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, தித்வா புயலை எதிர்க்கொள்ளுவதற்காக முன்னாயத்துடன் இருக்கவில்லை என்பது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்துக்கு முன்வைப்பதற்கான விசேட குழு ஒன்றை நியமிக்கும் யோசனை அரசாங்கத்துக்கு எதிராக சேறு பூசும் செயற்பாடு என்று ஆளுங்கட்சி கருத கூடாது.
இந்த குழுவில் ஆளும் தரப்பில் இருந்து 08 உறுப்பினர்களையும், எதிர்க்கட்சியில் 04 உறுப்பினர்களையும் உள்ளடக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைமைத்துவத்தை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள நிலையில் அரசாங்கம் அதனை கனத்திற் கொள்ளவில்லை. தலைமைத்துவத்தை தம்மிடம் வைத்துக்கொண்டு உண்மையை மூடி மறைக்கவே அரசாங்கம் முயற்சிக்கிறது.
எவருக்கும் சேறு பூச வேண்டும் என்பதற்காக நாங்கள் இந்த தெரிவுக்குழு அமைக்கும் யோசனை முன்வைக்கவில்லை. தித்வா புயல் போன்று எதிர்காலத்தில் பிறிதொரு இயற்கை அனர்த்தம் உருவாகும் போது அதனை எவ்வாறு முகாமைத்துவம் செய்ய வேண்டும் என்பதற்கான யோசனைகளை தயாரிப்பதற்காக வலியுறுத்துகிறோம்.
மழையுடனான காலநிலையின் போது நீர்பாசனத் திணைக்களம் செயற்பட்ட விதம் சந்தேகத்துக்குரியது. நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்படும் போது அதிகாரிகள் முறையாக செயற்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. பல ஆண்டுகால அனுபவமுடைய நீர்பாசனத்துறையின் நீர்த்தேக்க பிரிவின் பணிப்பாளரான நிசாந்த தனபால ஓரிரு மாதங்களுக்கு முன்னர் இடமாற்றம் செய்யப்பட்டு அவ்விடத்துக்கு கனிஸ்ட அதிகாரியான மனோஜ் என்பவர் நியமிக்கப்பட்டார்.இது முற்றிலும் தவறானது.
தித்வா புயல் ஊடாக அனைவரும் ஒரு சிறந்த பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும். இயற்கை அனர்த்தங்களை எதிர்க்கொள்ள மற்றும் முகாமைத்துவம் செய்வதற்கு உரிய புதிய திட்டங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.





