அலெக்சி நவால்னியின் உடல் அவரது தாயிடம் ஒப்படைப்பு
நவால்னியை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கொலை செய்ததாக அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பிப்ரவரி 16 ஆம் தேதி சிறையில் எதிர்பாராத விதமாக இறந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னியின் உடல் சனிக்கிழமை ஆர்க்டிக் நகரமான சலேகார்டில் அவரது தாயிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இருப்பினும், நவால்னியின் உடலுக்கு அடுத்து என்ன நடக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
நவால்னியை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கொலை செய்ததாக அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டை கிரெம்ளின் நிராகரித்துள்ளது.
நவால்னியின் இறப்புச் சான்றிதழில் அவர் இயற்கையான காரணங்களால் இறந்தார் என்று அவரது குழு வியாழக்கிழமை தெரிவித்தது.
உடல் விடுவிக்கப்படுவதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட ஒரு காணொலியில், நவால்னியின் மனைவி யூலியா நவால்னாயா, அரசியல் எதிரியின் சடலத்தை அரக்கத்தனமான புதின் சித்திரவதை செய்ததாகக் குற்றம் சாட்டினார்.