பயங்கரவாத குழுவில் இணைவதற்காக கனடாவை விட்டு வெளியேற முயற்சித்த ஒன்ராறியோ இளைஞர் கைது
வெளியீட்டுத் தடை காரணமாக அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை.

ஒன்ராறியோ மாகாணத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞர் ஒருவர் கனடாவை விட்டு வெளியேறி பயங்கரவாத குழுவொன்றில் இணைய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆர்.சி.எம்.பி தெரிவித்துள்ளது.
மத்திய பிராந்திய (ஒன்ராறியோ) ஒருங்கிணைந்த தேசியப் பாதுகாப்பு அமலாக்கக் குழுவால் (ஐஎன்எஸ்இடி) அந்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக ஆர்.சி.எம்.பி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. அந்த இளைஞர் எப்போது, எங்கு கைது செய்யப்பட்டார், அல்லது எந்தப் பயங்கரவாத குழுவில் சேர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது என்பதை ஆர்.சி.எம்.பி துல்லியமாகக் கூறவில்லை.
வெளியீட்டுத் தடை காரணமாக அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. பயங்கரவாத சமாதான முறி விதிகளின் கீழ் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.