சிறிலங்காவின் பிணையெடுப்புத் திட்டத்தை மேற்பார்வையிடும் பன்னாட்டு நாணய நிதியத்தின் குழு யாழ்ப்பாணத்திற்கு வருகை
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் உள்ளூர்ப் பன்னாட்டு நாணய நிதியத்தின் ஈடுபாட்டை வழிநடத்தும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் பேச்சுவார்த்தைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

சிறிலங்காவின் பிணையெடுப்புத் திட்டத்தை மேற்பார்வையிடும் பன்னாட்டு நாணய நிதியத்தின் மூத்த அதிகாரிகள் குழுவொன்று தற்போதைய 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் உடன்படிக்கையின் கீழ் முதல் தடவையாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாவட்டமான யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளதாக அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.
சிறிலங்காவுக்கான பன்னாட்டு நாணய நிதியத்தின் மூத்த பணித் தலைவர் பீற்றர் புரூயர் தலைமையிலான இந்தக் குழு கடந்த வாரம் வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் மற்றும் ஏனைய மூத்த அதிகாரிகளைச் சந்தித்து மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சி, கண்ணிவெடி அகற்றும் வேலைத்திட்டங்கள், போரினால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான கல்வி விடயங்கள், கொரோனாவுக்குப் பிந்தைய செயற்பாடுகள், வடபகுதியில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதகமான விளைவுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திங்களன்று கொழும்பு திரும்பிய இக்குழுவினர் நிதியமைச்சகத்துடன் கலந்துரையாடவுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் உள்ளூர்ப் பன்னாட்டு நாணய நிதியத்தின் ஈடுபாட்டை வழிநடத்தும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் பேச்சுவார்த்தைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
கொழும்பில் இடம்பெறும் கலந்துரையாடல்கள் சிறிலங்காவில் பாரியளவிலான பொருளாதார மறுசீரமைப்பை வலியுறுத்தும் தற்போதைய பன்னாட்டு நாணய நிதிய வேலைத்திட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள இலக்குகள் தொடர்பில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.