ட்விட்டருக்கு போட்டியாக ப்ளூ ஸ்கை

ரஜினிநடித்த எந்திரன் திரைப்படத்தில், சமூகத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான் வடிவமைத்த சிட்டி ரோபோ வில்லத்தனம் செய்யும்போது விஞ்ஞானி ரஜினிகாந்தே அதனை அழிப்பார். இதுபோல் டிவிட்டரை உருவாக்கிய ஜாக் டார்சியே அதற்கு போட்டி நிறுவனத்தை தொடங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டில் டிவிட்டர் சமூக வலைதளத்தை ஜாக் டார்சி உள்ளிட்ட 4 பேர் உருவாக்கினர். குறுகிய காலத்தில் விஸ்வரூபம் எடுத்ததைப் பார்த்து அதை பெரும் கோடீஸ்வரர் எலான் மஸ்க் பல குளறுபடிகளுக்குப் பின்னர் வாங்கினார். அதன் பிறகு டிவிட்டரில் பல மாற்றங்களை செய்து பயனர்களின் வயிற்றெரிச்சலுக்கு மஸ்க் ஆளானார்.
முதலில் அந்நிறுவனத்தில் பணியாற்றிய இந்தியர்கள் உட்பட ஏராளமானோர் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். தலைமைச் செயல் அதிகாரி என்ற பதவிக்கு உரிய மரியாதையை, மஸ்க் துச்சமாக்கினார். டிவிட்டரில் அதிகாரப்பூர்வ அங்கீகாரமான புளூ டிக்கினை பெற கட்டணம் செலுத்த வேண்டும் என்றார். பல முக்கிய பிரமுகர்களின் புளூ டிக்கினை நீக்கி மகிழ்ந்தார்.
பின்னர், டிவிட்டரின் அடையாளமான குருவி லோகோவை நாயாக மாற்றி அதிர்ச்சி அளித்தார். டிவிட்டர் தலைமைப் பதவியில் இருந்து விலகட்டுமா என கருத்துக் கணிப்பு நடத்தி பயனர்கள் வெளியேறுங்கள் எனக் கூறிய நிலையிலும் அதற்கு மட்டும் மவுனம் காக்கிறார்.
இதுபோதாதென நாய் லோகோவை மாற்றிவிட்டு மீண்டும் குருவியை இடம்பெறச் செய்தார். இவ்வாறாக 23 ஆம் புலிகேசி வடிவேலு போல் டிவிட்டர் நிறுவனத்தை வைத்து எலான் விளையாடிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், டிவிட்டரில் முக்கிய கட்டுரைகளை படிக்க கட்டணம் வசூலிக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பணம் இருப்பவர்கள் மட்டுமே டிவிட்டரை பயன்படுத்த தகுந்தவர்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பின்னணியில்தான் டிவிட்டரை ஆரம்பத்தில் உருவாக்கிய ஜாக் டார்சி வெகுண்டெழுந்து போட்டியாக ப்ளூ ஸ்கை சமூக வலைதள செயலியை வடிவமைத்துள்ளார். இது ஆரம்பக் கால டிவிட்டர் போன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, யாருக்கும் குறுஞ்செய்தி அனுப்ப முடியாது. வீடியோக்களை பதிவேற்ற முடியாது, 300 வார்த்தைகளுக்குள் மட்டுமே பதிவிட முடியும்.
இதற்கு சாமானியர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் டிவிட்டரை மிஞ்சும் வகையில் பல்வேறு அம்சங்களுடன் ப்ளூ ஸ்கையை மேம்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. புளு ஸ்கை தொடக்க விழாவில் பேசிய ஜாக் டார்சி, எலான் மஸ்கிற்கு தலைமைத்துவ திறன் இல்லை என்று விமர்சித்துள்ளதால் தனது திறனை நிரூபிக்கும் கட்டாயத்திற்கு மஸ்க் தள்ளப்பட்டுள்ளார்.
சமூக வலைதளப் போரில், டிவிட்டரை உருவாக்கிய டார்சியின் கைவண்ணத்தில் உதித்திருக்கும் ப்ளூ ஸ்கை முந்துமா அல்லது டிவிட்டரிடம் அது வீழுமா என்பதை காலம் தான் முடிவு செய்யும்.