மத்திய வங்கிக்கு புதிய பிரதி ஆளுநர்கள் நியமனம்
நாணயக் கொள்கை, நிதியியல் முறைமை உறுதிப்பாடு மற்றும் சர்வதேச ஒதுக்குகள் உள்ளிட்ட பல உயர்மட்ட உள்ளகக் குழுக்களிலும் அவர் பணியாற்றியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கி இந்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இரண்டு புதிய பிரதி ஆளுநர்களை நியமித்துள்ளது.
அதன்படி, உதவி ஆளுநர் மற்றும் நிர்வாக சபையின் செயலாளர் ஏ.ஏ.எம்.தாசிம் மற்றும் உதவி ஆளுநர் ஜே.பி.ஆர்.கருணாரத்ன ஆகியோர் முறையே ஜூன் 20 மற்றும் ஜூன் 24 ஆம் திகதிகளில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளின் பிரகாரம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுகைச் சபையினால் சிபாரிசு செய்யப்பட்டவாறு புதிய நியமனங்கள் நிதி அமைச்சரால் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கையொன்றில் குறிப்பிட்டது.
திரு.ஏ.ஏ.எம்.தாசிம் அவர்கள் இலங்கை மத்திய வங்கியில் வங்கித்தொழில் நிறுவனங்களின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குறுத்தல், பன்னாட்டுத் தொழிற்பாடுகள், தொடர்பாடல், கொடுப்பனவுகள் மற்றும் குடியேற்றங்கள், ஊழியர் சேமலாப நிதியம், நிதி, இடர் முகாமைத்துவம், வைப்புக் காப்புறுதி, பாதுகாப்புச் சேவைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பல்வேறு பதவிகளில் 31 ஆண்டுகளுக்கும் மேலான சேவையைக் கொண்டுள்ளார்.
நாணயக் கொள்கை, நிதியியல் முறைமை உறுதிப்பாடு மற்றும் சர்வதேச ஒதுக்குகள் உள்ளிட்ட பல உயர்மட்ட உள்ளகக் குழுக்களிலும் அவர் பணியாற்றியுள்ளார்.
ஜே.பி.ஆர்.கருணாரத்ன அவர்கள் இலங்கை மத்திய வங்கியில் வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களை மேற்பார்வை செய்தல் மற்றும் ஒழுங்குறுத்தல், நாணய முகாமைத்துவம், பொதுப்படுகடன் , செயலகம், நிதி, கொள்கை மீளாய்வு மற்றும் கண்காணிப்பு ஆகிய துறைகளில் வெவ்வேறு பதவிகளில் 33 ஆண்டுகளுக்கும் மேலான சேவையைக் கொண்டுள்ளார்.
வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைப் பணிப்பாளராகவும் நாணய அத்தியட்சகராகவும் கடமையாற்றிய அவர், வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் துறையில் சட்ட மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பைப் பலப்படுத்துவதில் பங்களிப்புச் செய்துள்ளதுடன், வங்கியல்லா நிதி நிறுவனங்கள் துறையை ஒருங்கிணைப்பதிலும் முக்கிய பங்கு ஆற்றியுள்ளார்.