சுனில் ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்புக்கு எதிரான மனு அடுத்த ஆண்டு விசாரணைக்கு வருகிறது
அடிப்படை உரிமை மீறல் மனு எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மிருசுவில் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 8 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 2015 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு இந்த மனுக்கள் கோருகின்றன.
மிருசுவில் படுகொலையில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், இலங்கை மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நாயகம் அம்பிகா சற்குணநாதன் ஆகியோர் இந்த மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
எவ்வாறாயினும், மனுக்களின் பிரதிவாதிகள் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது.