ராமாயாணம் படித்தால் தற்கொலை எண்ணம் வராது; தமிழிசை சௌந்தரராஜன்
ராமாயாணம், மகாபாரதம் துன்பத்தை தாங்க சொல்லிக் கொடுத்துள்ளது என தெலஙகானா, புதுச்சேரி ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுவையில் 56ஆம் ஆண்டு கம்பன் விழா வெள்ளிக்கிழமை (மே 12) தொடங்கியது. இந்த விழாவைத் தொடக்கி வைத்து கவர்னர் தமிழிசை, “தமிழகத்தில் 20 ஆயிரம் பேர் தற்கொலை செய்துள்ளனர். ராமாயணம், மகாபாரதம் கேட்டு கேட்டு மனஉறுதி பெற்று மனதை நிலைப்படுத்தி கொள்ளவேண்டும்.
மனதுக்கும் உடலுக்கும் தொடர்புண்டு. மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டால் உடல் நலமுடன் இருக்கும். மனதை சரியாக வைத்து கொண்டால் உடல் நலமாக இருக்கும்.
ராமாயணத்தை படித்தால் தற்கொலைக்கு முயற்சிக்கமாட்டார்கள். மகிழ்ச்சியை கொண்டாடுங்கள்.
மனதுக்கும் உடலுக்கும் நன்மையை தருவது ராமாயணம். அதை படித்தால் மனஅழுத்தம் வராது. சவால்களை சமாளிக்கவும், மகிழ்வை கொண்டாடவும், துன்பத்தை தாங்கவும், ஏமாற்றத்தை எதிர்கொள்வதையும் ராமாயணம் சொல்லிக்கொடுத்துள்ளது. குற்றம் குறைய வேண்டும்.
குற்றங்களால் வாழ்வு மாறுகிறது. ராமாயணம் மகாபாரதம் ஆகியவற்றை இளையோருக்கு தந்து வழிகாட்டுங்கள். வாழ்க்கை வாழதான் என்ற தத்துவத்தை இளையோருக்கு எடுத்து சொல்வோம்” எனப் பேசினார்.
தொடர்ந்து, ஐகோர்ட்டு நீதிபதி அரங்க மகாதேவன், “ஒரு நாட்டின் பெருமை, அந்நாட்டின் பொருளாதார பலத்தை மட்டும் சார்ந்த அல்ல.
அந்நாட்டின் மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவை சார்ந்ததாக அமைய வேண்டும். தன்னை உணர்ந்தவன் தன்னில் இருந்து விலகி தனக்கான அடையாளத்தை பிறரிடம் காண முடியும்.
இப்படி உணர்த்த ரத்தனாகரன் வால்மீகியாக மாறி ராமாயணத்தை தருகிறான். அறநெறி வாழ்க்கை வாழ்ந்தால் மானுட சமுதாயம் உச்சம் பெறும் என்ற சிந்தாந்தம் அந்த காலத்தில் ஏற்பட்டது. அதனால் தான் 6 நுாற்றாண்டில் இருந்து பக்தி இலக்கியம் செழிக்க தொடங்கியது” என்றார்.
தொடர்ந்து தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சுப்ரீம்கோர்ட்டு டெல்லி அரசுக்கான வழிமுறையை சொல்லி இருக்கிறார்கள். தலைநகர் என்பதால் அதற்கென்று தனி கருத்து உள்ளது.
ஒவ்வொரு யூனியன் பிரதேசமும் வெவ்வேறுதான். ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதம். எல்லாமே மக்களுக்கானதுதான். நீதிமன்ற தீர்ப்பில் கருத்து சொல்ல விரும்பவில்லை‘ என்றார்.
டெல்லி யூனியன் பிரதேசத்துக்கான தீர்ப்பு புதுவைக்கும் பொருந்தும் தானே.? என கேட்டதற்கு, ‘இந்தத் தீர்ப்பு அனைத்து யூனியன் பிரதேசத்துக்கும் பொருந்தாது. கவர்னர்கள்தான் அதிகாரம் படைத்தவர்கள் என்று நாங்கள் சொல்வதில்லை. முக்கியமாக நான் சொல்வதில்லை. அன்பால்தான் ஆள்கிறோம் எனத் தெரிவித்தார்.
தீர்ப்பு குறித்து முதல அமைச்சர் ரங்கசாமி கூறும்போது, மக்களால் தேர்வான அரசுக்குதான் அதிகாரம் என்ற சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு மகிழ்ச்சி தருகிறது.
இதைதான் நாங்கள் வலியுறுத்தி வந்தோம். இத்தீர்ப்பு புதுவைக்கு பொருந்துமா என்பதற்கு தீர்ப்பை படித்து பார்த்தால்தான் முழுமையாக தெரியும் என்றார்.