பாகிஸ்தான் பாஜகவுக்கு தான் எதிரி நாடு, எங்களுக்கு அல்ல: கர்நாடக காங்கிரஸ் தலைவர்
ஹரிபிரசாத்தின் அறிக்கைக்கு பதிலளித்த கர்நாடகப் பாஜக, இந்தியாவுக்கு எதிராக நான்கு முறை போர் தொடுத்த பிறகும் பாகிஸ்தானை "எதிரி நாடு" என்று காங்கிரஸ் கூறவில்லை என்று விமரிசித்ததுடன், கட்சி "தேச விரோத உணர்வுகளை" கொண்டுள்ளது என்றும் கூறியது.

கர்நாடக காங்கிரஸ் கவுன்சிலர் பி.கே.ஹரிபிரசாத் புதன்கிழமை, பாகிஸ்தான் பாஜகவுக்கு "எதிரி நாடு" ஆனால் காங்கிரஸ் அதை அண்டை நாடாக மட்டுமே கருதுகிறது என்று கூறியதன் மூலம் சர்ச்சையை ஏற்படுத்தினார். இதற்குப் பதிலளித்த மாநில பாஜக, காங்கிரஸ் "தேச விரோத உணர்வுகளை" கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.
செவ்வாய்க்கிழமை மாநிலத்தில் காங்கிரசின் மாநிலங்களவை வெற்றிக்குப் பிறகு பாகிஸ்தான் சார்பு கோஷங்கள் எழுப்பப்பட்டதாகப் பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஹரிபிரசாத் இந்தக் கருத்தை தெரிவித்தார்.
"எதிரி நாட்டுடனான எங்கள் உறவைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை பாகிஸ்தான் ஒரு எதிரி நாடு. எங்களைப் பொறுத்தவரை, பாகிஸ்தான் எதிரி நாடு அல்ல; இது எங்கள் அண்டை நாடு. பாகிஸ்தான் எங்கள் எதிரி நாடு என்று அவர்கள் கூறுகிறார்கள். சமீபத்தில், லாகூரில் உள்ள ஜின்னாவின் சமாதிக்கு சென்ற அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கினர். அப்போது பாகிஸ்தான் எதிரி நாடாக இல்லையா? என்று ஹரிபிரசாத் சட்ட மேலவையில் கூறினார்.
ஹரிபிரசாத்தின் அறிக்கைக்கு பதிலளித்த கர்நாடகப் பாஜக, இந்தியாவுக்கு எதிராக நான்கு முறை போர் தொடுத்த பிறகும் பாகிஸ்தானை "எதிரி நாடு" என்று காங்கிரஸ் கூறவில்லை என்று விமரிசித்ததுடன், கட்சி "தேச விரோத உணர்வுகளை" கொண்டுள்ளது என்றும் கூறியது.
கர்நாடக சட்டப்பேரவையில் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பப்பட்டதாக எதிர்க்கட்சியான பாஜக எழுப்பிய குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா எச்சரித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தடய அறிவியல் ஆய்வகம் (எஃப்.எஸ்.எல்) விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.