பெங்களூருவில் ஐபிஎல் போட்டியின் போது கெட்டுப்போன உணவு வழங்கப்பட்டதாக இளைஞர் புகார்
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சைதன்யாவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் உணவு ஒவ்வாமையால் அவதிப்படுவதை உறுதி செய்தனர்.

மே 12 அன்று பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 டி20 கிரிக்கெட் போட்டியின் போது பார்வையாளர்களுக்குக் கெட்டுப்போன உணவை வழங்கிய குற்றச்சாட்டில் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் (கே.எஸ்.சி.ஏ) நிர்வாகத்திற்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகம் மற்றும் உணவக மேலாளர் ஆகிய இருவர் மீதும் கப்பன் பூங்கா காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கத்தார் ஏர்வேஸ் ரசிகர்களின் மொட்டை மாடி ஸ்டாண்டில் இருந்து தனது நண்பர் கௌதமுடன் போட்டியை பார்த்த 23 வயதான சைதன்யா இந்தப் புகாரை அளித்தார்.
போட்டியின் போது, சைதன்யா ஸ்டாண்டில் உள்ள உணவகத்தில் (கேண்டீன்) இருந்து நெய்ச் சோறு, இட்லி, சன்னா மசாலா, கட்லெட், ரைத்தா மற்றும் உலர் ஜாமூன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உட்கொண்டார். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே சைதன்யாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டது.
சிறிது நேரத்தில், சைதன்யா அமர்ந்திருக்கும்போதே மயங்கி விழுந்தார். மைதான ஊழியர்களின் உதவியுடன் மைதானத்திற்கு வெளியே இருந்த மருத்துவ வண்டியில் (ஆம்புலன்சு) அவருக்கு முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சைதன்யாவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் உணவு ஒவ்வாமையால் அவதிப்படுவதை உறுதி செய்தனர்.
உணவகத்தில் பரிமாறப்பட்ட உணவு சைதன்யாவின் உடல்நிலை மோசமடையக் காரணமாக இருக்கலாம் என்று குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன.