கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் என்ன? நாமல் கேள்வி
அரசாங்கத்தின் தவறுகளுக்கு அரச அதிகாரிகள் பொறுப்பேற்கும் நிலைமை காணப்படுகிறது. ஜனாதிபதி பொதுமன்னிப்பு விவகாரத்திலும் இவ்வாறான நிலைமையே காணப்படுகிறது.

பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிடுக்கப்பட்டமை முறைகேடானது என்று ஜனாதிபதி நியமித்த குழு அறிக்கை சமர்ப்பித்ததை தொடர்ந்து அரசாங்கத்தின் தவறு அரச அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ளது. துறைமுக அபிவிருத்தி அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரை ஏன் இதுவரையில் விசாரணைக்கு உட்படுத்தவில்லை. கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் என்னவென்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (8) நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானியின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது
75 ஆண்டுகால ஆட்சியியலை விமர்சித்து தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. கடந்த 16 ஆண்டுகளாக உப்பு இறக்குமதி செய்யப்படவில்லை என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும். மோசடி செய்வதற்காக தான் அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது என்று கடந்த காலங்களில் குறிப்பிட்டீர்கள்.
இன்று அரிசி, தேங்காய், உப்பு என்று அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் இறக்குமதி செய்யப்படுகிறது. தாங்கள் குறிப்பிட்டதை போன்று மோசடி செய்வதற்காகவா அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது என்று நாங்கள் கேட்கிறோம்.
அரச நிர்வாகத்தில் இடம்பெறும் தவறுகள் மற்றும் குறைகளை அரச அதிகாரிகள் மீது சுமத்தி விட்டு தப்பித்துக் கொள்ளும் புதிய கலாச்சாரத்தை இந்த அரசாங்கம் கடைப்பிடிக்கிறது.. 323 கொள்கலன்கள் விடுவிப்பு விவகாரத்திலும் இந்த பிரச்சினை தோற்றம் பெற்றது. பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் என்னவிருந்தது என்பது எவருக்கும் தெரியாது.
பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் என்னவிருந்தது என்பதை அறிவோம், அந்த கொள்கலன்கள் எங்குள்ளது என்று கடந்த காலங்களில் இந்த அரசாங்கத்தில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் குறிப்பிட்டார்கள். ஆனால் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு இந்த கொள்கலன்கள் விடுவிப்பு தவறு என்று அறிக்கை சமர்ப்பித்ததும், அரச அதிகாரிகள் மீது பழி சுமத்துகிறார்கள்.
அரசாங்கத்தின் தவறுகளுக்கு அரச அதிகாரிகள் பொறுப்பேற்கும் நிலைமை காணப்படுகிறது. ஜனாதிபதி பொதுமன்னிப்பு விவகாரத்திலும் இவ்வாறான நிலைமையே காணப்படுகிறது. ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் பிரகாரமே குறித்த கைது விடுவிக்கப்பட்டாரே தவிர, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் பொதுமன்னிப்பில் அல்ல என்பதை குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு விவகாரத்தில் ஜனாதிபதியின் செயலாளரோ, நீதியமைச்சரோ அல்லது நீதியமைச்சின் செயலாளரோ பொறுப்புக்கூறவில்லை. சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சிறையில் உள்ளார்.
பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பில் பல முறைப்பாடளித்துள்ளதாக குறிப்பிட்டீர்கள்.அந்த விசாரணைகளின் முன்னேற்றம் என்ன ? துறைமுக அமைச்சர் மற்றும் துறைமுக பிரதி அமைச்சர் இந்த கொள்கலன்கள் விடுவிப்பு பற்றி தமக்கு தெரியும் என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டார்கள்.ஆனால் இதுவரையில் அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்படவில்லை. ஆனால் இவ்விடயம் பற்றி பாராளுமன்றத்தில் பேசிய தயாசிறி ஜயசேகர மற்றும் அர்ச்சுனா ஆகியோர் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டார்கள்.
கொள்கலன்கள் விடுவிப்பு முறைகேடானது என்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில், அடுக்கத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அரசாங்கம் அமைதி காக்கிறது.அனைத்து தவறுகளையும் அரச அதிகாரிகள் மீது சுமத்தினால் அரச கட்டமைப்பு முழுமையான வீழ்ச்சியடையும் என்றார்.