லலித், குகன் காணாமலாக்கப்பட்டமை குறித்த வழக்கில் சாட்சியமளிக்க தயார்: கோட்டா
பாதுகாப்பு காரணங்களால் காரணமாக தன்னால் யாழ்ப்பாணத்துக்கு செல்ல முடியாது எனவும் அழைப்பாணையை இரத்து செய்யவும் கோரி கோட்டாபாய ராஜாக்ஷசார்பில் மேன் முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அரசியல் செயற்பட்டாளர்களான லலித், குகன் ஆகியோரை கடந்த 2011 ஆம் ஆண்டு கடத்திச்சென்று காணாமாலாக்கிய விவகாரம் தொடர்பில் யாழ்.நீதிவான் நீதிமன்றில் இடம்பெறும் ஆட்கொணர்வு மனு தொடர்பில் தாம் சாட்சியம் வழங்க தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேன்முறையீட்டு மனு 30-07-2025அன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜாக்ஷ சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இதனை அறிவித்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட, குமுதினி விக்கிரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவர் அடங்கிய குழாம் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக தனது சேவைபெருநருக்கு யாழ்.நீதிமன்றுக்கு சென்று சாட்சியம் அளிப்பது கடினம் எனவும் அது தொடர்பில் கொழும்பு நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார்.
இந்த கோரிக்கையை இன்றிலிருந்து (நேற்று) நான்கு வாரங்களுக்குள் யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உரிய உத்தரவுகளைப் பெற நடவடிக்கை எடுக்குமாறு மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவுக்கு உத்தரவு பிறப்பித்தது.
தனது சேவைபெருநர் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதால் இந்த வழக்கின் விசாரணைகளை நிறைவுறுத்துமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நீதியரசர்கள் குழாமிடம் கோரிக்கை விடுத்தார்.இதன்போது மனுதாரர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோர் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி நுவான் போபகேவ இதற்கு இணக்கம் தெரிவித்தார். இதற்கமைய இந்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணையை முடிவுக்குக் கொண்டுவர உயர்நீதிமன்றம் முடிவு செய்தது.
2011 ஆம் ஆண்டு இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனது தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக சாட்சியமளிக்க நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களால் காரணமாக தன்னால் யாழ்ப்பாணத்துக்கு செல்ல முடியாது எனவும் அழைப்பாணையை இரத்து செய்யவும் கோரி கோட்டாபாய ராஜாக்ஷசார்பில் மேன் முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனுவை விசாரித்த மேன் முறையீட்டு நீதிமன்றின் அப்போதைய தலைமை நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் சோபித்த ராஜகருணா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் கடந்த 2020 நவம்பர் 24 ஆம் திகதி யாழ். நீதிமன்றின் அறிவித்தலை இரத்து செய்தது.
இதற்கு எதிராக ஆட்கொணர்வு மனு மனுதார்ரகள் உயர் நீதிமன்றில் மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி மேன் முறையீடு செய்துள்ளனர். அந்த மனுவே நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.