கிழக்கு கொள்கலன் முனையத்தை தனியார் நிறுவனத்துக்கு வழங்க முடிவு
கொழும்பு தெற்கு துறைமுக கருத்திட்டம் - கிழக்கு கொள்கலன் முனையம் மற்றும் மேற்கு கொள்கலன் முனைய அபிவிருத்திக்காக 2021.02.01 திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு கொள்கலன் முனைய முகாமைத்துவம் மற்றும் தொழிற்பாடுகளுக்கு பொறுப்புக்கள் வரையறுக்கப்பட்ட கம்பனியொன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றையதினம் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பு தெற்கு துறைமுக கருத்திட்டம் - கிழக்கு கொள்கலன் முனையம் மற்றும் மேற்கு கொள்கலன் முனைய அபிவிருத்திக்காக 2021.02.01 திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு கொள்கலன் முனைய முகாமைத்துவம் மற்றும் தொழிற்பாடுகளுக்கு இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு முழு உரித்துடைய பொறுப்புக்கள் வரையறுக்கப்பட்ட கம்பனியொன்றை நிறுவுவதற்கு இலங்கை துறைமுக அதிகாரசபையின் பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்மூலம், உயர்ந்தபட்ச பொருளாதார நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கும், தொழிற்பாட்டு வினைத்திறனை அடைவதற்கும் இயலுமை கிடைக்கும். அதற்கமைய, 'வரையறுக்கப்பட்ட கொழும்பு கிழக்கு கொள்கலன் முனைய (தனியார்) கம்பனி' எனும் பெயரில் கம்பனியொன்றை நிறுவுவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.