மத்திய அரசின் டிஜிட்டல் பொருளாதார உத்தி குறித்து அமைச்சக செயலாளர்களுக்கு விளக்கம்
அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதார இலக்குகளை எவ்வாறு அடைவது என்பது குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதார மூலோபாயம் மற்றும் அதன் நடைமுறைப்படுத்தல் தொடர்பாக அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செயலமர்வொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கலாநிதி நந்திகா சனத் குமாரநாயக்க தலைமையில் வியாழனன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த அமர்வில் அரசாங்கத்தின் சமீபத்திய டிஜிட்டல் பொருளாதார மூலோபாயங்கள் மற்றும் அவற்றின் நடைமுறைப்படுத்தல் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பொதுத்துறை செயல்பாடுகளில் இணைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதார இலக்குகளை எவ்வாறு அடைவது என்பது குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. பொதுச் சேவைகளின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கும் வீண்விரயம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கும் டிஜிட்டல்மயமாக்கலைப் பயன்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
பிரதமரின் செயலாளர் ஜி.பி.சபுதன்திரி, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே உள்ளிட்ட பல்வேறு அமைச்சுக்களின் செயலாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.





