கல்வி கொள்கை குறித்து தம்மிடம் ஆலோசனை பெற வருமாறு உதய கம்மன்பில அழைப்பு
பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்ட சர்ச்சைக்குரிய விடயத்தை நீக்கினாலோ அல்லது கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய பதவி விலகுவதாலோ இந்த பிரச்சினைக்கு தீர்வுக் காண முடியாது.
புதிய கல்வி கொள்கையை தயாரிக்கும் அனுபவம் மற்றும் திறன் இந்த அரசாங்கத்துக்கு கிடையாது. தற்போது அமல்படுத்தியுள்ள கல்வி கொள்கையை அரசாங்கம் நீக்க வேண்டும். கொள்கை தயாரிப்பு தொடர்பில் எம்மிடம் ஆலோசனை கோர வேண்டும் என்று பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
புதிய கல்வி கொள்கை தொடர்பில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களை 12-01-2026 அன்று சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டின் பௌத்த கலாசாரத்துக்கு முரணான வகையில் தான் புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் இளம் தலைமுறையினர் மதத்தை பின்பற்றாமல் மனம் போன போக்கில் செல்வார்கள். அவ்வாறு நிகழ்ந்தால் இலங்கையில் பௌத்த மதம் இல்லாதொழியும்.
பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்ட சர்ச்சைக்குரிய விடயத்தை நீக்கினாலோ அல்லது கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய பதவி விலகுவதாலோ இந்த பிரச்சினைக்கு தீர்வுக் காண முடியாது.
அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தை அரசாங்கம் உடன் வாபஸ் பெற வேண்டும். அத்தோடு புதிய கல்விக் கொள்கை தொடர்பில் பல்வேறு தரப்பினருடன் பரந்துப்பட்ட பேச்சுவார்த்தையில் அரசாங்கம் ஈடுபட வேண்டும்.
புதிய கல்விக் கொள்கைத் தொடர்பில் அரசாங்கம் எம்முடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். தேசியத்தை முன்னிலைப்படுத்திய வகையில் புதிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றார்.





