தொடர் உதவிகளின்றி இலங்கையின் மீட்சியைத்துரிதப்படுத்த முடியாது: ஐ.நா சபை
ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டின் பிரகாரம் நாட்டின் மொத்த சனத்தொகையில் 8 சதவீதமானோர், அதாவது சுமார் 18 இலட்சம் மக்கள் இவ்வனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் மொத்த சனத்தொகையில் 8 சதவீதமானோர், அதாவது சுமார் 18 இலட்சம் மக்கள் பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 527,000 சிறுவர்கள் உள்ளடங்கலாக சுமார் 12 இலட்சம் மக்கள் இன்னமும் உடனடி மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
அதுமாத்திரமன்றி பசியும், உணவுப்பாதுகாப்பின்மையும் அதிகரித்துவருவதுடன் நாடளாவிய ரீதியில் மூன்றில் ஒரு குடும்பம் உணவுப்பாதுகாப்பற்ற நிலைக்கு முகங்கொடுத்திருப்பதாகக் கவலை வெளியிட்டுள்ள ஐ.நா சபை, நிலையான நிதியுதவியும் தொடர் ஆதரவுமின்றி இலங்கையின் மீட்சி என்பது மிக மந்தகரமானதாகவே இருக்கும் எனவும், குறிப்பாக சிறுவர்களின் கல்வி மற்றும் நலன் என்பன பாரிய அச்சுறுத்தல் நிலைக்குள் தள்ளப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கிப் பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பேரனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் (28) ஒரு மாதம் பூர்த்தியடையவுள்ள நிலையில், இவ்வனர்த்தத்தினால் நாட்டுக்கும், மக்களுக்கும் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தத்தை கடந்த ஒரு தசாப்த காலத்தில் நாடு முகங்கொடுத்த மிகமோசமான பேரழிவு என வர்ணித்திருக்கும் ஐ.நா, அவ்வனர்த்தம் இடம்பெற்று ஒரு மாதகாலம் பூர்த்தியடையவுள்ள நிலையில், சுமார் 5 இலட்சத்துக்கும் சிறுவர்கள் உள்ளடங்கலாக 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உடனடி மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையிலிருப்பதாகக் கரிசனை வெளியிட்டுள்ளது.
பேரனர்த்தத்தின் விளைவாக குறிப்பாக கண்டி, நுவரெலியா மற்றும் பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் பதிவான மிகமோசமான சேதங்களினால் இடம்பெயர்ந்து, தற்காலிக பாதுகாப்பு நிலையங்களில் வசித்துவருவோரில் சில குடும்பங்கள் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்திருப்பதாக ஐ.நாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டின் பிரகாரம் நாட்டின் மொத்த சனத்தொகையில் 8 சதவீதமானோர், அதாவது சுமார் 18 இலட்சம் மக்கள் இவ்வனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 527,000 சிறுவர்கள் உள்ளடங்கலாக சுமார் 12 இலட்சம் மக்கள் இன்னமும் உடனடி மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையில் உள்ளனர்.
அத்தோடு தேசிய ரீதியிலான கட்டமைப்புக்களுடன் தமது மனிதாபிமான முகவரமைப்புக்கள் இணைந்து முன்னெடுத்த உடனடி மதிப்பாய்வுகளின்படி, நாட்டின் 9 மாகாணங்களிலும் மிகமோசமான சேதங்கள் பதிவாகியிருப்பதும், அத்தியாவசிய சேவைகள் வெகுவாகப் பாதிப்படைந்திருப்பதும், பெண்கள், சிறுவர்கள் மற்றும் விசேட தேவையுடையோர் உயர் அச்சுறுத்தல் நிலையில் இருப்பதும் உறுதிசெய்யப்பட்டிருப்பதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.
அதுமாத்திரமன்றி பசியும், உணவுப்பாதுகாப்பின்மையும் அதிகரித்துவருவதுடன் நாடளாவிய ரீதியில் மூன்றில் ஒரு குடும்பம் உணவுப்பாதுகாப்பற்ற நிலைக்கு முகங்கொடுத்திருப்பதாகவும், அக்குடும்பங்கள் தாம் நாளாந்தம் உண்ணும் உணவின் அளவைக் குறைத்தல் உள்ளிட்ட மாற்றுவழிகளைக் கையாண்டுவருவதாகவும் ஐ.நாவின் அறிக்கையில் கரிசனை வெளியிடப்பட்டுள்ளது.
'நாடளாவிய ரீதியில் பெரும் எண்ணிக்கையான சிறுவர்கள் போதிய பாதுகாப்பு, மின்சாரம், சுகாதார வசதிகளற்ற அதிக நெருக்கடியான தற்காலிக பாதுகாப்பு நிலையங்களில் தனியாகவோ அல்லது அவர்களது குடும்பத்தினருடனோ தங்கியிருக்கின்றனர்.
இதனிடையே சிறுவர்களின் கல்விச்செயற்பாடுகள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 1300 க்கும் மேற்பட்ட பாடசாலைகளும், 6 பல்கலைக்கழகங்களும் சேதமடைந்திருப்பதுடன் சுமார் 500 பாடசாலைகள் இன்னமும் தற்காலிக தங்குமிடங்களாக இயங்கிவருகின்றன.
சேதமடைந்த பாடசாலைகளில் கல்வி பயின்றுவந்த மாணவர்களை அதற்கு அண்மையிலுள்ள இயங்கும் பாடசாலைகளுக்கு மாற்றுவதற்கு அவசியமான நடவடிக்கைகள் உள்நாட்டு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் கல்விச்செயற்பாடுகளில் நீண்டகாலத்தடை ஏற்படுவதைத் தடுப்பதற்கு பல்வேறு பகுதிகளில் இவ்வாறான தற்காலிக கற்றல் நிலையங்களை உருவாக்கவேண்டியிருக்கும் என மானுடவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்' என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு நலிவுற்ற நிலையில் இருப்போருக்கு அவசியமான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கென தம்மால் அறிவிக்கப்பட்டிருக்கும் 'மனிதாபிமான முன்னுரிமையளிப்புத் திட்டத்தை' நடைமுறைப்படுத்துவதற்கு 35.3 மில்லியன் டொலர்கள் நிதி சேகரிக்கப்பட்டுவருதாக சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா சபை, சிறுவர்களுக்கு அவசியமான உடனடி உதவிகளை வழங்குவதற்கு யுனிசெப் அமைப்புக்கு மாத்திரம் 7.8 மில்லியன் டொலர்கள் நிதி தேவைப்படுவதாகவும், இருப்பினும் கடந்த 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அதனிலும் அரைப்பங்கு நிதியே கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் கவலை வெளியிட்டுள்ளது.
மேலும் நிலையான நிதியுதவியும், தொடர் ஆதரவுமின்றி இலங்கையின் மீட்சி என்பது மிக மந்தகரமானதாகவே இருக்கும் எனவும், குறிப்பாக சிறுவர்களின் கல்வி மற்றும் நலன் என்பன பாரிய அச்சுறுத்தல் நிலைக்குள் தள்ளப்படும் எனவும் மனிதாபிமான முகவரமைப்புக்கள் எச்சரித்திருப்பதாகவும் ஐ.நா சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





