3 ஈரானிய கப்பல்களுக்கு இலங்கையே அழைப்பு விடுத்தது - இலக்கானதாக ஈரானிய தூதுவர்
அமெரிக்காவின் அத்தாக்குதலில் மரணித்தவர்களில் பலர் படைவீரர்கள் அல்ல. மாறாக அவர்கள் சக்ஸபோன் உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைப்பவர்களாவர்.
ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா, ஐ.ஆர்.ஐ.எஸ் புஷெர் மற்றும் ஐ.ஆர்.ஐ.எஸ் லவன் ஆகிய ஈரானுக்குச் சொந்தமான கப்பல்களை நட்புறவு விஜயம் என்ற அடிப்படையில் இலங்கைக்கு வருகைதரும்படி 'மிலான் - 2026' நிகழ்வில் வைத்து இலங்கை கடற்படைத் தளபதி விடுத்த அழைப்புக்கு அமைவாகவே அக்கப்பல்கள் இலங்கைக் கடற்பரப்பை நோக்கி வருகைதந்ததாகவும், அவ்வேளையிலேயே ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா அமெரிக்காவின் தாக்குதலுக்கு இலக்கானதாகவும் இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரெஸா டெல்கோஷ் அறிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து நடத்திய கூட்டுத்தாக்குதலை அடுத்து மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல்கள் வலுப்பெற்றிருக்கும் பின்னணியில், இவ்விவகாரம் தொடர்பான சமகால நிலைவரம் மற்றும் ஈரான் நிலைப்பாடு என்பன குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கில் 23-03-2026 அன்று கொழும்பிலுள்ள ஈரானிய தூதுவரின் இல்லத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 15 - 25 ஆம் திகதி வரை நடைபெற்ற 'மிலான் - 2026' சர்வதேச கடற்படை பயிற்சி மற்றும் அணிவகுப்பில் கலந்துகொண்டு, இந்தியக் கடற்பரப்பில் இருந்து வெளியேறியதன் பின்னர், கடந்த 4 ஆம் திகதி அதிகாலை இலங்கையின் காலி நகருக்குத் தெற்கே சுமார் 40 - 44 கடல் மைல் தொலைவில் அமெரிக்க நீர்மூழ்கிக்கப்பல் நடத்திய தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட ஐ.ஆர்.ஐ.எஸ் (ஐரிஸ்) டெனா குறித்து ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே தூதுவர் டெல்கோஷ் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:
இம்மாதத் தொடக்கத்தில் இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானுக்குச் சொந்தமான ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா கப்பலில் இருந்த சுமார் 104 பேர் கொல்லப்பட்டனர். அந்தக் கப்பலில் இருந்தவர்கள் போரை எதிர்கொள்வதற்கோ அல்லது எதிர்த்தாக்குதல்களை நடத்துவதற்கோ எவ்விதத்திலும் தயார்நிலையில் இருக்கவில்லை. அதேபோன்று இந்தத் தாக்குதல் போர் நடைபெறும் பகுதியிலிருந்து பல கடல் மைல் தொலைவில் இருந்த கப்பலின் மீதே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்ற 'மிலான் 2026' நிகழ்வில் பங்கேற்ற ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா, ஐ.ஆர்.ஐ.எஸ் புஷெர் மற்றும் ஐ.ஆர்.ஐ.எஸ் லவன் ஆகிய ஈரானுக்குச் சொந்தமான கப்பல்களை நட்புறவு விஜயம் என்ற அடிப்படையில் இலங்கைக்கு வருகைதரும்படி அந்நிகழ்வில் வைத்து இலங்கை கடற்படைத் தளபதியினால் அழைப்புவிடுக்கப்பட்டது. அந்த அழைப்புக்கு அமைவாகவே அக்கப்பல்கள் இலங்கை கடற்பரப்பை நோக்கி வருகைதந்தன. அக்கப்பலில் இருந்தவர்கள் தாக்குதலை எதிர்கொள்வதற்குத் தயாராக ஆயுதங்களுடன் இருக்கவில்லை. அதுமாத்திரமன்றி அமெரிக்காவின் அத்தாக்குதலில் மரணித்தவர்களில் பலர் படைவீரர்கள் அல்ல. மாறாக அவர்கள் சக்ஸபோன் உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைப்பவர்களாவர்.
அதேவேளை ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா உள்ளிட்ட கப்பல்கள் இலங்கை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு கோரிக்கை விடுத்து 11 மணிநேரம் காத்திருந்ததாகக் கூறப்படும் விடயம் தொடர்பில் எம்மிடம் உறுதிப்படுத்தப்பட்ட போதிய தகவல்கள் இல்லை. அதுபற்றி நாம் ஆராய்ந்து வருகிறோம்.
மேலும் ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா மீதான தாக்குதலைத் தொடர்ந்து திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட ஐ.ஆர்.ஐ.எஸ் புஷெர் கப்பல் இன்னமும் திட்டமிடப்பட்டது போல திருகோணமலை துறைமுகத்துக்குக் கொண்டுசெல்லப்படவில்லை. அக்கப்பலில் இருந்து கொழும்பு துறைமுகத்தில் தரையிறக்கப்பட்ட ஈரானியர்கள் தற்போது வெலிசர கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றார்.





