அவசரகாலநிலை தொடர்ந்து நீடிக்கப்படுவது குறித்து மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தீவிர கரிசனை
'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தத்தைக் கையாள்வதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பில் நாம் ஏற்கவே தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருந்தோம்.
'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தத்தின் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகாலநிலைப் பிரடகனம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுவருவது குறித்து தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், அதனை உடன் முடிவுக்குக்கொண்டுவந்து, மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
நாட்டில் அவசரகாலநிலை தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டுவருவது குறித்து நாம் மிகுந்த கவலையடையும் அதேவேளை, அவசரகாலநிலையைத் தொடர்ந்து நீடிக்கவேண்டாம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வலியுறுத்துகிறோம். அத்தோடு அவசரகாலநிலையை நீடிப்பதை பாராளுமன்றம் நிராகரிப்பதுடன், அதற்குப் பதிலாக சமூகத்துக்கு மிக அவசியமானதும், அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டிருப்பதுமான அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துமாறும் கோருகிறோம்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2490ஃ06 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் மூலம் மே மாதம் 28 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் அவசரகாலநிலைப் பிரகடனத்தை மேலும் ஒரு மாதகாலத்துக்கு நீடித்துள்ளார். இந்தப் பிரகடனம் கடந்த 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் மூலம் அங்கீகரிக்கப்பட்டது.
பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட இந்த அவசரகாலநிலை எதிர்வரும் 26 ஆம் திகதியுடன் முடிவுக்கு வரவுள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் பேரனர்த்த முகாமைத்துவம் என்பவற்றுடன் தொடர்புடைய எந்தவொரு நடவடிக்கையும் பொதுச்சட்டத்தின் பிரகாரம் முன்னெடுக்கப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும். அதனூடாக அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை மீளுறுதிப்படுத்தமுடியும்.
'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தத்தைக் கையாள்வதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பில் நாம் ஏற்கவே தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருந்தோம். நாம் குறிப்பிட்டதுபோல் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியிடப்பட்ட அவசரகால நடைமுறைகளுக்கும் இயற்கைப் பேரனர்த்தத்தைக் கையாள்வதற்கும் இடையில் எவ்வித தொடர்பும் இருக்கவில்லை. அதனையடுத்து அப்பிரகடனத்தை நாம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தியதன் பின்னர், அரசாங்கம் அதில் சில திருத்தங்களை மேற்கொண்டது.
இவ்வாறானதொரு பின்னணியில் இவ்வருடம் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் மற்றும் அதன் விளைவாக விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டிருக்கும் தாக்கம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு அவசரகாலநிலை நீடிக்கப்படுவதாகக் கடந்த மே மாதம் பிரதமர் ஹரினி அமரசூரிய பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார். நாட்டில் அடுத்தடுத்து ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் அவசரகாலநிலைப் பிரகடனம் மூலமான அதிகாரங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றமை மிகுந்த கரிசனைக்குரிய விடயமாகும்.
எது எவ்வாறெனினும், அவசரகாலநிலைப் பிரகடனத்தின் மூலம் வழங்கப்படும் அதிகாரங்கள் மிக அவசியமான தேவையேற்படும்போது ஒரு இறுதி உத்தியாக, வரையறுக்கப்பட்ட காலப்பகுதிக்கு மாத்திரமே பயன்படுத்தப்படவேண்டிய அசாதாரணமான அதிகாரங்கள் ஆகும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
அதன்படி இம்மாதம் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் அவசரகாலநிலைப் பிரகடனம் நீடிக்கப்பட்டமையானது ஜனநாயக நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அபாயத்தைக் கொண்டிருக்கிறது. ஏனெனில் தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களை மீறிச் செயற்படக்கூடிய பரந்துபட்ட அதிகாரங்கள் ஜனாதிபதியிடத்தில் குவிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பது பொதுமக்களின் சுதந்திரத்தையும் நம்பிக்கையையும் வெகுவாகப் பலவீனப்படுத்தும். 'தித்வா' சூறாவளி அனர்த்தம் ஏற்பட்டு 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், அரசாங்கம் இத்தகைய அசாதாரண நடவடிக்கைகள் ஏன் அவசியம் என்பதற்கான தெளிவானதும், நியாயமானதுமான விளக்கத்தை வழங்காமல், அவசரகாலநிலையைத் தொடர்ந்து நீடித்துவருவது ஏற்புடையதல்ல எனச் சுட்டிக்காட்டியுள்ளது.





