நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு: திருத்த யோசனை வர்த்தமானியில் வெளியிடப்படும்
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு 04-08-2026 அன்று கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்த யோசனை வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும், அவ்வேளையில் அதற்கு எதிராகக் கருத்துரைத்து வாதிக்கமுடியும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு 04-08-2026 அன்று கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதன்போது நீதிமன்றக் கட்டமைப்பு மறுசீரமைப்பு மற்றும் வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தல் என்பன தொடர்பில் ஆராய்வதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:
சஜித் பிரேமதாஸ இப்போது தான் தூக்கத்திலிருந்து விழித்தாரா அல்லது ரணில் விக்ரமசிங்க மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகிய இரு சட்டத்தரணிகளின் ஆலோசனைக்கு அமைவாக இந்த யோசனையை முன்வைத்தாரா என்று தெரியவில்லை.
நீதிமன்ற மறுசீரமைப்பு குறித்து சுமார் 11 வருடங்களாகப் பேசப்பட்டு வருவதுடன், கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட குழுக்களினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களையே இப்போது நாம் நடைமுறைப்படுத்துகிறோம்.
எது எவ்வாறிருப்பினும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்த யோசனை வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன் பின்னர், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அவ்வேளையில் யாரென்றாலும் அதற்கு எதிராகத் தமது கருத்துக்களைத் தெரியப்படுத்தி வாதிடமுடியும். அதன் பின்னரே இச்சட்டமூலம் நிறைவேற்றப்படும் என்றார்.





