இலங்கை பட்டய ஊடக வல்லுநர்களுக்கான நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு
தவறிழைக்கும் உறுப்பினர்களை நிரலிலிருந்து அகற்றவோ அல்லது தற்காலிகமாக இடைநிறுத்தவோ இப்பேரவைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக துறையினரின் தொழில்சார் தராதரங்களை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்துவதையும், அவர்களுக்கான முறையான ஒழுக்கநெறிக்கோவைகளை வகுத்து அங்கீகாரத்தை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்ட 'இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம்பெற்ற நிறுவகம்' எனும் அமைப்பைத் தாபிப்பதற்கான புதிய சட்டமூலம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரின் பணிப்புரைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 05 ஆம் திகதியிட்ட வர்த்தமானப் பத்திரிகையின் பகுதி II இற்குக் குறைநிரப்பியாக இந்தச் சட்டமூலம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இச்சட்டமூலத்தின் கீழ் ஊடகத்துறையிலுள்ள எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், பதிப்பாசிரியர்கள், வெளியீட்டாளர்கள், ஊடக முகாமையாளர்கள், ஊடக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புகைப்படப்பிடிப்பாளர்கள் உள்ளிட்ட பரந்தளவிலான தரப்பினர் அனைவரும் 'ஊடக உயர்தொழிலர்கள்' என்ற வரையறைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
தோற்றுவிக்கப்படவுள்ள இந்த உயர்தொழில் அமைப்பானது, தகுந்த தகைமைகளைக் கொண்டுள்ள ஊடகவியலாளர்களை முறைப்படி உறுப்பினர்களாக இணைத்து உத்தியோகபூர்வ இடாப்பு ஒன்றைப்பேணல், சர்வதேச புதிய ஊடகப் போக்குகளுக்கேற்ப கல்வி மற்றும் செயல்முறைப் பயிற்சிகளை வழங்குதல், பட்டயத் தகைமைகளுக்கான பரீட்சைகளை நடத்துதல் மற்றும் ஊடக வள நிலையம் ஒன்றைத் தாபித்து சிறந்த ஊடக கலாசாரத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற பிரதான குறிக்கோள்களைக் கொண்டு இயங்கும்.
மேலும், ஊடகவியலாளர்களுக்கென பிரத்தியேக நடத்தைக் கோவையொன்றைத் தயாரித்து, அதன் மூலம் தொழில்சார் ஒழுக்கத்தைப் பேணவும், ஏதேனும் தொழில்சார் துர்நடத்தைகள் குறித்து விசாரிக்க ஒழுக்காற்றுக் குழுவை நியமித்து, தவறிழைக்கும் உறுப்பினர்களை நிரலிலிருந்து அகற்றவோ அல்லது தற்காலிகமாக இடைநிறுத்தவோ இப்பேரவைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிறுவகத்தின் நிருவாக மற்றும் முகாமைத்துவப் பொறுப்புகள் அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட 15 தகுதிவாய்ந்த உறுப்பினர்களைக் கொண்ட ஓர் ஆளும் பேரவையிடம் ஒப்படைக்கப்படும். இருப்பினும், இந்த நிரந்தரப் பேரவை முறைப்படி அமைக்கப்படும் வரை, ஒரு வருட காலப் பகுதிக்கு இயங்கும் வகையில் அமைச்சரின் அமைச்சுச் செயலாளர் மற்றும் ஊடகத்துறையில் ஆக குறைந்தது 20 வருட கால அனுபவமிக்க 6 நிபுணர்களை உள்ளடக்கிய ஓர் 'இடைக்காலப் பேரவை' மூலம் இதன் ஆரம்பக் கட்ட நிருவாகக் கட்டமைப்புகளும் விதிகளும் வழிநடத்தப்படும்.
நிறுவகம் தனக்கென ஒரு பிரத்தியேக நிதியத்தைக் கொண்டிருப்பதுடன், வெளிநாட்டு நிதியுதவிகளைப் பெறும்போது நிதியமைச்சின் முன்னங்கீகாரத்தைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, இந்நிறுவகத்தின் கணக்குகள் அனைத்தும் வருடாந்தம் கணக்காய்வாளர் நாயகத்தால் ஆய்வு செய்யப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதுடன், இது 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் அட்டவணைப்படுத்தப்பட்ட ஒரு நிறுவனமாகக் கருதப்பட்டு கடுமையான வெளிப்படைத்தன்மையுடன் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.





