எரிபொருட்களின் விலைகளில் எவ்வித திருத்தங்களுமில்லை: பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
இம்மாதம் எரிபொருட்களின் விலைகளில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜானக ராஜகருணா தெரிவித்தார்.
போர் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை மாறினால், அது இலங்கையை மட்டுமல்ல, முழு உலகையுமே பாதிக்கும். அத்தகைய சந்தர்ப்பங்களில் எரிபொருள் விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் மட்டுமே விலையில் மாற்றம் ஏற்படும். எவ்வாறிருப்பினும் இம்மாதம் எரிபொருட்களின் விலைகளில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜானக ராஜகருணா தெரிவித்தார்.
கொழும்பில் 03-03-2026 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை விடுமுறை தினங்களாகக் காணப்பட்ட போதிலும், எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டது. அதற்கமைய திங்களன்று ஒரு கோடியே 32 இலட்சத்து 800 லீற்றர் டீசலும், ஒரு கோடியே 17 இலட்சத்து 2000 லீற்றர் ஒக்டேன் 92 ரக பெற்றோலும், 8 இலட்சத்து 48 000 லீற்றர் ஒக்டேன் 92 ரக பெற்றோலும், 5 இலட்சத்து 65 000 லீற்றர் மண்ணெண்ணெய்யும், 3 இலட்சத்து 43 000 லீற்றர் சுப்பர் டீசலும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
வழமையை விட இரு மடங்கு அதிகமாக திங்களன்று எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்கிழமை காலை 6 மணி முதல் 8 மணி வரை 8 இலட்சத்து 15 740 லீற்றர் டீசல், 4 இலட்சத்து 81 800 லீற்றர் 92 ரக பெற்றோல், 19 800 லீற்றர் சுப்பர் டீசல், 39 600 லீற்றர் 95 ரக பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்றவாறு எவ்வித தடையும் இன்றி எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஈரான் ஓர்முஸ் நீரிணையை மூடினாலும் அல்லது தாக்குதல் நடத்தினாலும், இலங்கையின் பெற்றோல் மற்றும் டீசல் விநியோகத்திற்கு பாதிப்பு இருக்காது. இலங்கைக்குத் தேவையான பெற்றோல் மற்றும் டீசல் இந்தியா, சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து வருகின்றன. இவை ஓர்முஸ் நீரிணை வழியாக வருவதில்லை. ஏப்ரல் மாதம் வரை தேவையான எரிபொருள் விநியோக அட்டவணை ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது.
மசகு எண்ணெய் பொதுவாக வளைகுடா பிராந்தியத்திலிருந்து வந்தாலும், தற்போது வரவிருக்கும் கப்பல்கள் பாதுகாப்பான இடங்களிலிருந்தே ஏற்றப்படுகின்றன. ஒருவேளை போர் நீடித்தால், ஆப்பிரிக்கா (நைஜீரியா), அமெரிக்கா அல்லது வெனிசுவேலா போன்ற மாற்று நாடுகளிலிருந்து மசகு எண்ணெயைப் பெறுவதற்கான வசதிகள் குறித்து ஏற்கனவே அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எண்ணெய் வழங்கும் விநியோகஸ்தர்களின் எண்ணிக்கை 3-4 இலிருந்து தற்போது 10-க்கும் மேலாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், விநியோகச் சங்கிலியில் சிக்கல் இருக்காது. இம்மாதத்தில் எந்த வகையிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றோம். இந்த உலக யுத்த நிலைமைக்கு மத்தியில் எரிபொருள் விலை மாத்திரமன்றி, ஏனைய பொருட்களின் விலைகளும் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது.
இவ்வாறு ஏற்படக் கூடிய சவால்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எவ்வாறிருப்பினும் இம்மாதத்தில் எரிபொருள் விலைகளில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது. போர் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை மாறினால், அது இலங்கையை மட்டுமல்ல, முழு உலகையுமே பாதிக்கும். அத்தகைய சந்தர்ப்பங்களில் எரிபொருள் விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் மட்டுமே விலையில் மாற்றம் ஏற்படும். பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பொதுமக்களைப் பாதிக்கும் வகையில் அதிக இலாபம் ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. செலவினங்களுக்கு ஏற்பவே விலைகள் நிர்ணயிக்கப்படும் என்றார்.





